சென்னை: சூளைமேட்டை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவனம், அதிக வட்டி தருவதாகக் கூறி லட்சக் கணக்கான முதலீட்டாளர்களிடம் இருந்து, சுமார் 2 ஆயிரத்து 438 கோடி வசூலித்து மோசடி செய்ததாக, பணத்தை முதலீடு செய்து பாதிக்கப்பட்ட மக்கள் புகார் அளித்தனர். இந்த வழக்கில் இதுவரை 21 நபர்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து ரொக்கம் மற்றும் சொத்துக்களை பறிமுதல் செய்தனர்.
ஆனால் இவ்வழக்கில் முக்கிய இயக்குநர்களான ராஜசேகர், அவரது மனைவி மகாலட்சுமி, மைக்கேல் ராஜ் ஆகியோர் துபாயில் தலைமறைவாகி இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் ஆருத்ரா நிர்வாகிகள் சிலருடன் தொடர்பில் இருந்ததாக குற்றம் சாட்டப்படும் நடிகர் ஆர்.கே சுரேஷ் துபாயில் பதுங்கி இருப்பதாக போலீசார் கூறிவருகின்றனர்.
ஆகையினால் முக்கிய வழக்குகளில் வெளிநாடுகளில் பதுங்கியுள்ள முக்கிய குற்றவாளிகளை கைது செய்ய பயன்படுத்தும், இரு நாடுகளுக்கு இடையேயான சிறப்பு பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தத்தை பயன்படுத்தி ஆருத்ரா வழக்கின் முக்கிய குற்றவாளியான ஆருத்ரா நிறுவனத்தின் இயக்குநர் ராஜசேகரை பிடிக்க பொருளாதார குற்றப்பிரிவு பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்து வரும் குற்றவாளிகளை கையகப்படுத்தி கொள்ளவும், வழக்கின் தகவல்களைச் சேகரிக்கவும் மற்றும் சந்தேக நபர் வெளிநாட்டில் வசிக்கும் போது, அவரை முறையாக விசாரிக்கவும் எம் - லாட் எனும் இந்த பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ராஜசேகர் வசித்து வரும் இருப்பிடம், பயன்படுத்தி வரும் காரின் பதிவெண், முதலீடு செய்தற்கான தகவல்கள் சேகரிக்கப்பட்டு, துபாய் நாட்டிற்கு தெரியப்படுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆருத்ரா கோல்டு நிறுவனம் மூலம் பொதுமக்களிடம் வசூலித்த மோசடி பணத்தை, இயக்குநர் ராஜசேகர் துபாயில் முதலீடு செய்திருப்பதாக கண்டுபிடித்துள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், இரு நாட்டு பரஸ்பர ஒப்பந்தம் மூலம் சொத்துக்களை முடக்க முடியும் என்று போலீசார் கூறியுள்ளனர்.
மேலும் வெளிநாட்டை சேர்ந்த ஒருவர் துபாயில் சொந்தமாக ஒரு இடத்தை அசையா சொத்தாக வாங்குவதில் சட்ட சிக்கல் இருக்கும் நிலையில் பல்வேறு தொழில்களில் முதலீடு செய்திருக்கலாம் என கூறும் நிலையில், துபாயில் சுமார் ரூபாய் 300 கோடி ரூபாய் வரை ஆருத்ரா ராஜசேகர் முதலீடு செய்திருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
இரு நாட்டுடன் எம் - லாட் எனும் பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தத்தை பயன்படுத்தி, ஆருத்ரா வழக்கு நடைபெறும் நீதிமன்றம் மூலம் உத்தரவு பெற்று அவற்றை இருநாட்டு அதிகாரிகள் மூலமாக துபாய் நாட்டின் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து துபாயில் முதலீடு செய்யப்பட்டுள்ள மோசடி பணத்தை முடக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் ஆருத்ரா மோசடி வழக்கில் தலைமறைவாக உள்ள ராஜசேகர் உள்ளிட்டவர்களை பிடிக்க, ஏற்கனவே இன்டர்போல் மூலம் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளதால், இந்த பரஸ்பர ஒப்பந்தத்தின் படி ராஜசேகர் உள்ளிட்டவர்களை அந்நாட்டு காவல்துறை, தமிழக காவல்துறையிடம் ஒப்படைக்கும் எனவும் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: நகை வியாபாரியிடம் நகை பறித்த கொள்ளைக் கும்பல்.. போலீசில் சிக்கியது எப்படி?