சென்னை: முக்கிய ஆவணங்கள் தொலைந்து போனால் தமிழ்நாடு காவல்துறை இணையதளத்தில் பறிபோன ஆவணங்கள் தொடர்பான புகார் அறிக்கை தொழில்நுட்பக் கோளாறு காரணமாக முறையாக கிடைக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. தொழில்நுட்ப கோளாறால் எழுந்த இப்பிரச்னை சரிசெய்யப்பட்டதாக காவல்துறை இன்று (ஆக.24) விளக்கமளித்துள்ளது.
தமிழகத்தில் பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம் மற்றும் ஆர்சி புக் ,பள்ளி மற்றும் கல்லூரி சான்றிதழ் முக்கிய அடையாள அட்டைகள் தொலைந்து போகும்போது அதைத் திரும்பப் பெறுவதற்கு தொலைந்துபோன இடத்திற்கு அருகாமையில் இருக்கும் காவல் நிலையத்தில் புகார் அளித்து அதற்கான ரசீதை பெற வேண்டும். அந்த காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட ரசீதை அடிப்படையாக வைத்து தொலைந்துபோன ஆவணத்தை புதிதாக பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த நடைமுறை காரணமாக, பல முக்கிய ஆவணங்கள் பொதுமக்களுக்கு தொலைந்தபோன உடனே புதிதாக பெறுவதற்கு மிகவும் காலதாமதம் ஆவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து 2017 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு குற்ற ஆவண காப்பகம், அதிகாரப்பூர்வ தமிழ்நாடு காவல்துறை இணையதளத்தில் தொலைந்து போன ஆவணங்கள் தொடர்பாக புகார் அளித்து அறிக்கை பெறுவதற்காக வசதிகளை ஏற்படுத்தியது.
தமிழ்நாடு காவல்துறை இணையதளத்தில் பொதுமக்கள் 50 ரூபாய் செலுத்தி எல்டிஆர் எனப்படும் தொலைந்துபோன ஆவணங்கள் குறித்த புகார் அறிக்கையை ஆன்லைனில் உடனடியாக பெரும் வசதி உருவாக்கப்பட்டது. இவ்வாறாக, ஆவணங்கள் பறிபோனவுடன் முதற்கட்டமாக சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பான முழு விவரத்தையும் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். அடுத்த கட்டமாக, எந்த ஆவணம் காணாமல் போனது, எவ்வாறு காணாமல் போனது பற்றிய தகவல்களை பதிவிட்டு புகைப்படம் உள்ள அரசாங்க அடையாள அட்டை ஒன்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இவ்வாறாக செய்யும் பொழுது, உண்மையாகவே தொடர்புடைய நபரின் ஆவணம் தொலைந்து போனது தொடர்பாக நம்பகத்தன்மையுடன் கூடிய தமிழக காவல்துறை புகார் அறிக்கை ஆன்லைனில் உடனடியாக டவுன்லோட் செய்து கொள்ளலாம். ஆனால், அவ்வாறு டவுன்லோடு செய்து கொடுக்கப்படும் எல்டிஆர் அறிக்கையில் பொதுமக்கள் பதிவிடும் பல்வேறு விவரங்கள் எல்டிஆர் அறிக்கையில் முறையாக பதிவாகாததால், அந்த அறிக்கையை பயன்படுத்தி பாஸ்போர்ட், லைசென்ஸ், ஆர்சி புக் உள்ளிட்ட ஆவணங்களை புதிதாக பெறுவதற்கு விண்ணப்பிக்கும் போது, குறைபாடு உள்ள எல்டிஆர் அறிக்கை இருப்பதால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஒவ்வொரு முறையும் எல்டிஆர் அறிக்கையில் கொடுக்கப்படும் தகவல்கள் ஒவ்வொரு விதமாக பதிவாகவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். இதனால் பலர் தாங்கள் தொலைத்த மற்றும் காணாமல்போன ஆவணங்களை புதிதாக விண்ணப்பித்து பெறுவதற்கு பெரும் சிக்கலாக அமைந்துள்ளது. இந்தப் பிரச்னையானது கடந்த பல மாதங்களாகவே இருந்து வருகிறது என சிலர் குற்றம்சாட்டி இருந்தனர்.
இதுகுறித்து தமிழக காவல்துறையில் அதிகாரப்பூர்வ இணையதளத்தை நிர்வாகிக்கும் தமிழ்நாடு குற்ற ஆவண காப்பக அதிகாரிகளிடம் கேட்டபோது, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக எல்டிஆர் அறிக்கை இதுபோன்று பிழையாக முழுமையாக தகவல்கள் பதிவாகாமல் வெளியானதாகவும், தற்போது தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டதாக தமிழ்நாடு குற்ற ஆவண காப்பக உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: "எந்த கோப்புகளை அனுப்பினாலும் திருப்பி அனுப்புவதையே கவர்னர் வாடிக்கையாக கொண்டுள்ளார்" - எ.வ.வேலு விமர்சனம்!