உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கரோனா நிவாரண உதவி தொகை 1,000, ஏப்ரல் மாதத்திற்கான அத்தியாவசிய பொருள்களை விலை இல்லாமல் வழங்க உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் முதலமைச்சர் நிவாரண உதவித்தொகை 1000ரூபாய் மற்றும் அத்தியாவசிய பொருள்கள் வழங்கும் தேதியுடன் கூடிய டோக்கன் வீடு வீடாக சென்று வழங்கப்பட வேண்டும் என அறிவித்துள்ளார். எனவே ஏற்கனவே வழங்கப்பட்ட டோக்கன்களுக்கு நிவாரண உதவி தொகை, அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்படும் பணி முடிவடைந்தவுடன் வீடு வீடாக சென்று அத்தியாவசிய பொருள்கள் பெறுவதற்கான தேதி குறிப்பிட்டு டோக்கன் வழங்கி நிவாரண உதவித் தொகை 1,000 ரூபாய் வழங்கப் படவேண்டும். நிவாரண உதவித்தொகை வழங்கப்படும் போது மின்னணு இயந்திரத்தில் பதிவு செய்ய வேண்டும்.
ஐந்தாம் தேதி நியாயவிலைக் கடைகளை திறக்காமல் அன்றைய தினம் வீடு வீடாகச் சென்று அத்தியாவசியப் பொருள்களைப் பெறுவதற்கான தேதி குறிப்பிட்ட சீட்டு மற்றும் நிவாரண உதவித்தொகை வழங்கப்பட வேண்டும். மேலும், ஆறாம் தேதி ஏற்கனவே வழங்கப்பட்ட அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை நியாயவிலை கடைகளில் வழங்கப்பட வேண்டும். ஏழாம் தேதியிலிருந்து டோக்கன் வழங்கப்பட்டு அவர்களுக்கு நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட வேண்டும்.
மேலும் எக்காரணத்தைக் கொண்டும் நிவாரண உதவி தொகை 1,000 ரூபாய் நியாய விலை கடையில் வழங்கக் கூடாது. டோக்கன் வழங்கும் போதே அதில் குறிப்பிட்ட நாளில் மட்டுமே பொருள்களை வாங்க கடைக்கு வர வேண்டும் என்றும் அறிவுரை வழங்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க...விழுப்புரத்தில் கரோனா வைரஸ் தொற்று பாதித்த ஒருவர் உயிரிழப்பு!