சென்னை: அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, நெஞ்சுவலி காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முன்னதாக, அமைச்சர் செந்தில் பாலாஜி மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை ஆகிய பொறுப்புகளை வகித்து வந்தார்.
இந்த நிலையில், செந்தில் பாலாஜியின் பொறுப்பில் இருந்த மின்சாரம், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை ஆகியவை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமிக்கும் பிரித்து வழங்கி நேற்று (ஜூன் 16) தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அது மட்டுமல்லாமல், செந்தில் பாலாஜி இலாகா இல்லாத (Minister without portfolio) அமைச்சராகத் தொடரவும் ஆணையிடப்பட்டுள்ளது.
முன்னதாக, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்க வேண்டும் என ஆளுநர் கடந்த மே 31 அன்று ஒரு கடிதம் எழுதியிருந்ததாக கூறினார். இதனையடுத்து, இந்தக் கடிதம் கிடைக்கப் பெற்ற அடுத்த நாளே முதலமைச்சர் ஜூன் 1 அன்று ஆளுநருக்கு இது குறித்த தெளிவான சட்ட ரீதியான காரணங்களை விளக்கி பதில் கடிதம் அனுப்பி வைத்ததாகவும் தெரிவித்தார்.
அந்த கடிதத்தில், ஆளுநரின் கடிதம் அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்பதை சுட்டிக் காட்டியும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சருக்குத்தான் அமைச்சரை நீக்கவோ, நியமிக்கவோ பரிந்துரை செய்யும் அதிகாரம் இருக்கிறது என்பதையும் அதில் கூறி இருந்ததாக அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
மேலும், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி, அமைச்சர்களின் பொறுப்புகளை மாற்றி அமைக்கும் அதிகாரம் முதலமைச்சருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ள நிலையில், தேவையற்ற வகையில் அமலாக்கத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பற்றி விசாரித்து வருவதை சுட்டிக்காட்டி, சரியான காரணத்தை மேற்கோள் காட்டி கடிதம் அனுப்புமாறு ஆளுநர் கேட்டிருப்பதாக கூறிய அவர், இது மாநில அரசின் நிர்வாகத்தில் ஆளுநர் தலையிடுவதாகவும், அரசியல் சட்டத்திற்கு புறம்பானதாகவும் உள்ளதாக தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, நேற்று (ஜூன் 16) ஆளுநர் மாளிகை தரப்பில், “அமைச்சர் செந்தில் பாலாஜி உடல் நலக் குறைவாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர் மீது குற்றவியல் வழக்கு நடைமுறை மற்றும் அவர் நீதிமன்றக் காவலில் இருப்பதால், அவரை அமைச்சரவையில் தொடர்வதை அனுமதிக்க முடியாது” என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மேலும், “முதலமைச்சர் அளித்த பரிந்துரை கடிதத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி வகித்து வரும் மின் துறையை கூடுதல் விளக்கமாக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஒதுக்கியதற்கு ஒப்புதல் அளித்துள்ளார். மேலும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை இலாகாவை கூடுதல் பொறுப்பாக வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துசாமிக்கு ஒதுக்கீடு செய்ததற்கு ஒப்புதல் அளித்துள்ளார்” என தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'குற்றவியல் வழக்கில் சிக்கிய செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர முடியாது' - ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம்