தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 2019ஆம் ஆண்டுக்கான தமிழ்த்தாய் விருது, கபிலர் விருது,உ.வே.சா விருது, கம்பர் விருது, சொல்லின் செல்வர் விருது, ஜி. யு. போப் விருது, உமறுப்புலவர் விருது, இளங்கோவடிகள் விருது, சிங்காரவேலர் விருது, அம்மா இலக்கிய விருது, மறைமலையடிகளார் விருது, அயோத்திதாச பண்டிதர் விருது, சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது, உலக தமிழ்ச்சங்க விருது மற்றும் முதலமைச்சர் கணினி தமிழ் விருது ஆகியவற்றுக்கு தேர்வானவர்களுக்கு விருது வழங்கும் விழா வரும் 20ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு விருதுகளை வழங்கவுள்ளார். விருது பெறுபவர்களின் பெயர் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.
தமிழ்த்தாய் விருதினை சிக்காகோ தமிழ்ச் சங்கமும், கபிலர் விருதினை புலவர் வெற்றி அழகனும், கம்பர் விருதினை சரஸ்வதி ராமனாகாவும் வென்றுள்ளனர். அதிமுக பேச்சாளர் லியாகத் அலிகான் உமறுப்புலவர் விருதுக்கும், பத்திரிகையாளர் மாலன் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதுக்கும் தேர்வாகியுள்ளனர்.
தமிழ்த்தாய் விருதுக்கு 5 லட்சம் ரூபாய் ரொக்கம், நினைவு பரிசு கேடயம், சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதுக்கு நபர் ஒருவருக்கு 1 லட்சம் ரொக்கம், பொன்னாடை, கபிலர் விருது, உ.வே.சா விருது, கம்பர் விருது, சொல்லின் செல்வர் விருது, ஜி. யு. போப் விருது, உமறுப்புலவர் விருது, இளங்கோவடிகள் விருது, சிங்காரவேலர் விருது, அம்மா இலக்கிய விருது, மறைமலையடிகளார் விருது, அயோத்திதாச பண்டிதர் விருது, முதலமைச்சர் கணினி தமிழ் விருது ஆகியவற்றுக்கு தேர்வானவர்களுக்கு 1 லட்சம் ரூபாய், 1 சவரன் தங்கம், தகுதியுரை, காசோலை பேழை, பொன்னாடை வழங்கப்படும்.
மற்ற விருதுகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம், தகுதியுரை, பொன்னாடை வழங்கப்படும் என தமிழ் வளர்ச்சித் துறை முதன்மை செயலர் மகேசன் காசிராஜன் தெரிவித்துள்ளார்.