சென்னை: சகாயம் ஐஏஎஸ் கடந்தாண்டு அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியன்று, விருப்ப ஓய்வு அளிக்குமாறு கோரி, அதற்கான கடிதத்தை தமிழ்நாடு அரசிடம் அளித்திருந்தார். தமிழ்நாடு அரசு அவருடைய விருப்ப ஓய்வை தற்போது ஏற்றுக்கொண்டு அவரை பணியிலிருந்து விடுவித்துள்ளது.
57 வயதாகும் ஐஏஎஸ் அலுவலரான சகாயம், நேர்மையாகப் பணியாற்றி மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர். புதுக்கோட்டையைச் சேர்ந்த இவர், மதுரை மாவட்ட ஆட்சியராகப் பணிபுரிந்தபோது, கிரானைட் குவாரிகளில் நடந்த பல ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடுகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தார்.
இதனால், இளைஞர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் கதாநாயகனாக அறியப்பட்டாலும் அரசின் பணியிட மாற்றத்திற்கும் உள்ளானார்.
வேட்டி தினம்
எந்தத் துறையில் பணியாற்றினாலும், அதில் சிறப்பாகவே தன்னுடையே வேலையைச் செய்துவந்தார் சகாயம். கோ- ஆப்டெக்ஸ் துறையின் நிர்வாக இயக்குநராகப் பணிபுரிந்தபோது, கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தைக் காக்கும் வகையில், வேட்டி தினத்தைக் கொண்டாடினார்.
அவர் எடுத்த முன்முயற்சியின் காரணமாக, வேட்டி தினத்தை முன்னிட்டு கல்லூரிகளில் இன்றளவும் கோ-ஆப்டெக்ஸ் ஸ்டால்கள் அமைக்கப்படுகின்றன.
தனது சொத்துக் கணக்கு விவரங்களை வெளியிட்டு, அனைத்து ஐஏஎஸ் அலுவலர்களும் தங்களது சொத்துக்கணக்கை வெளியிட வேண்டும் எனக் கோரிக்கைவிடுத்தார். நேர்மையானவர்களைப் பார்த்து பிழைக்கத் தெரியாதவன் என்று கூறும் இந்தச் சமூகத்தில், நேர்மையுடன் செயல்பட்ட இவருக்கு அரசு தொடர்ச்சியாக தந்த பரிசு பணியிட மாற்றமும், முக்கியமில்லாத துறைகளில் அவரைப் பணியமர்த்தியதும்தான்.
அரசியலுக்கு அழைத்த இளைஞர்கள்
இளைஞர்கள் அவரை அரசியலுக்கு வர வேண்டும் என அழைத்தபோதும்கூட, ஊழலுக்கு எதிராகத் தான் பணியாற்றிய நாளே, தான் அரசியலுக்கு வந்துவிட்டதாகச் சொன்னார். இவரின், நேர்மையைப் பார்த்துவந்து இளைஞர்கள் பட்டாளம், மக்கள் பாதை என்ற அமைப்பை ஏற்படுத்தி மக்களுக்கான நலத்திட்ட உதவிகள், அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
தமிழ் ஆர்வம்
தமிழ் மொழி மீது அவர் தீராத பற்று கொண்டவர். தமிழ் மொழியை தமிழர்கள் தங்கள் அன்றாடப் பயன்பாட்டு மொழியாக தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் என்பதை தொடர்ச்சியாக சகாயம் வலியுறுத்திவந்தார். தமிழர்கள் மத்தியில் ஆங்கில மோகம் உச்சத்தில் இருப்பதை சுட்டிக்காட்டி, குழந்தைகளுக்கு பெயர் வைப்பதில் தொடங்கி கையொப்பம் வரை தமிழே இருக்க வேண்டும் என்று பேசிவந்தவர் சகாயம்.
கடந்த ஆறு ஆண்டுகளாக சென்னை அறிவியல் நகர துணைத்தலைவராகப் பணியாற்றிவந்த அவர், கடந்தாண்டு விருப்ப ஓய்வுக் கடிதத்தை தமிழ்நாடு அரசுக்கு அனுப்பினார். ஆனால், அவரின் கடிதத்தை தமிழ்நாடு அரசு ஏற்கவும் இல்லை, ஏன் விருப்ப ஓய்வு பெறுகிறீர்கள் என கேட்கவும் இல்லை.
சகாயத்தின் கடைசி ஆசை
நேர்மையான அலுவலராக இருந்த தன்னை ஏன் விருப்ப ஓய்வு பெறுகிறீர்கள் எனத் தமிழ்நாடு அரசு கேட்காதது வருத்தத்தை தருவதாக ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் சகாயம் தெரிவித்துள்ளார்.
மேலும், காந்தியின் பிறந்தநாளன்று விருப்ப ஓய்வுக் கடிதத்தை கொடுத்த நிலையில், காந்தியின் நினைவு நாளான ஜனவரி 30ஆம் தேதி பணியிலிருந்து விடுவிக்க அரசைக் கோரியதாகவும், ஆனால், அந்த தனது ஆசையைக்கூட அரசு நிறைவேற்றாததையும் வருத்தத்துடன் அந்தப் பேட்டியில் சகாயம் பதிவுசெய்துள்ளார்.
தான் பணிபுரிந்த இடங்கள் அனைத்திலும், தனது இருக்கைக்குப் பின்னர் 'லஞ்சம் தவிர்த்து, நெஞ்சம் நிமிர்த்து' என்ற வாசகத்தை எழுதி வைத்திருந்தார் சகாயம். ஐஏஎஸ் அலுவலராகப் பணியாற்றிய காலத்தில் ஊழல் செய்பவர்களின் வயிற்றில் புளியை கரைத்து சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த சகாயம் இனி பொதுத்தளத்தில் மக்களுக்காக மக்களுடன் சேர்ந்து பணியாற்றுவார் என்பது மட்டும் நிச்சயம்.
இதையும் படிங்க: தமிழின் முக்கியத்துவத்தை மத்திய அரசு குறைக்கக் கூடாது - சகாயம் ஐ.ஏ.எஸ்.