சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி திடீரென நான்கு நாட்கள் பயணமாக சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். டெல்லியில் இருந்து தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவிக்கு அவசர அழைப்பு வந்ததன் அடிப்படையில் டெல்லி சென்றுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆளுநர் உடன் அவரின் செயலாளர், உதவியாளர், பாதுகாப்பு அதிகாரி ஆகியோரும் டெல்லி சென்றுள்ளனர்.
மேலும் செந்தில் பாலாஜி இலாக்கா இல்லாத அமைச்சராக தொடருவதை ரத்து செய்ய வேண்டும் என அதிமுகவினர் புகார் அளித்ததன் அடிப்படையில் குறித்து ஆலோசனை மேற்கொள்ள தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி டெல்லி சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் தமிழ்நாட்டில் ஆளுநருக்கும், தமிழ்நாடு அரசுக்கும் தொடர்ந்து மோதல் உருவாகி வரும் நிலையில் டெல்லி சென்றுள்ள ஆளுநர், பிரதமர், குடியரசு தலைவர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து பேச இருப்பதாகவும் கூறப்படுகிறது. இருந்தபோதிலும், ஆளுநர் ஆர்.என். ரவி டெல்லி பயணம் குறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: திமுக மீது வழக்கு போட்டு யாரும் ஜெயிக்க முடியாது - ஆர்.எஸ்.பாரதி பேச்சு
முன்னதாக கடந்த ஜூன் 15ஆம் தேதி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் சந்தித்தார். அப்போது ஆளுநரிடம், “செந்தில் பாலாஜி இந்த இரண்டு ஆண்டுகளில் செய்திருக்கக் கூடிய ஊழல்கள் கொள்ளைகள், அதை அனைத்தையும் விசாரிக்க வேண்டும்.
இந்தியாவிலேயே மிகப்பெரிய ஊழல் 2ஜி ஊழல். ஆனால், இது 2ஜி ஊழலை விட மிகப்பெரிய ஊழலாக வெளிவந்து விடும்” என கூறியதாக கூறப்படுகிறது. மேலும், கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவியை நீக்க வேண்டும் என கோரிக்கை மனுவை வழங்கினார். கடந்த ஜூன் 21 ஆம் தேதி பெரம்பலூரில் கையெழுத்து இயக்கத்தினை திமுக துணை பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் பேசிய ஆ.ராசா, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி பதவி விலக வேண்டும் என கூறினார். தொடர்ந்து கையெழுத்து இயக்கத்திற்கு வருகை புரிந்தவர்கள் அனைவரும் கையெழுத்துப் போடுமாறு கேட்டுக் கொண்டார். இந்த கையெழுத்தானது அரசியலுக்காக மட்டுமல்ல மற்றும் ஆட்சி அதிகாரத்திற்கு மட்டுமல்ல எனவும் தெரிவித்திருந்தார். இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்து நடக்க இந்த நிலையில் நான்கு நாட்கள் பயணமாக ஆளுநர் திடீரென டெல்லி சென்று இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: Opposition Meeting: பாஜகவுக்கு எதிராக விறுவிறுப்படையும் எதிர்கட்சிகள் கூட்டம்