சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பரிந்துரையை இலாகா மாற்றத்திற்கு மட்டும் ஒப்புதல் அளித்த நிலையில், செந்தில் பாலாஜி இலாக இல்லாமல் அமைச்சரவையில் தொடர்வதை ஏற்க தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மறுப்பு தெரிவித்துள்ளார். 'அமைச்சர் செந்தில் பாலாஜி உடல் நலக்குறைவாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர் மீது குற்றவியல் வழக்கு நடைமுறை மற்றும் நீதிமன்றக்காவலில் இருப்பதால், அவரை அமைச்சரவையில் தொடர்வதை அனுமதிக்க முடியாது' என தமிழ்நாடு ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு தற்போது காவிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நேற்றைய தினம் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் இருந்த துறைகள் இருவேறு அமைச்சர்களுக்கு பிரித்து அளிக்க தமிழ்நாடு அரசு சார்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநருக்கு பரிந்துரைக் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். இந்த நிலையில், அந்தப் பரிந்துரையை ஆளுநர் ஏற்க மறுத்துவிட்டதோடு அதை திருப்பி அனுப்பிவிட்டார். இதற்கு திமுக அமைச்சர்கள் பலரும் அதிருப்தி தெரிவித்திருந்த நிலையில், சபாநாயகர் அப்பாவு இதற்கு வருத்தம் தெரிவித்து இருந்தார்.
இதையும் படிங்க: EPS Vs RS Bharathi: எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்றது ஏன்? - ஆர்.எஸ்.பாரதி விளக்கம்
இதனிடையே, "அமைச்சருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டிருப்பதால் மருத்துவக் காரணங்களுக்காக இலாகாவை மாற்றுவதாகச் சொல்கிறீர்கள். ஆனால், அவரை அமலாக்கத்துறை கைது செய்திருக்கிறது. அதை நீங்கள் குறிப்பிடாததால், உங்கள் பரிந்துரையை ஏற்க முடியாது" என ஆளுநர் ஆர்.என்.ரவி அரசுக்கு பதில் கடிதம் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அரசியல் சட்டத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டிய ஆளுநர் இப்படி அரசியல் சட்டத்திற்கு விசுவாசமாக இல்லாமல் இருக்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் மாண்புக்கு இழுக்கு ஏற்படுத்தும் நடவடிக்கையே தொடர்ந்து ஆளுநர் மேற்கொள்வது வேதனைக்குரியது, கண்டனத்திற்குரியது என உயர் கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி நேற்று செய்தியாளிடம் தெரிவித்தார்.
இந்த நிலையில் இது தொடர்பாக, தமிழ்நாடு ஆளுநரின் முதன்மைச் செயலாளர் இன்று (ஜூன் 16) வெளியிட்டுள்ள கடிதத்தில், 'முதலமைச்சர் அளித்த பரிந்துரை கடிதத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி வகித்து வரும் மின் துறையை கூடுதல் விளக்கமாக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஒதுக்கியதற்கு ஒப்புதல் அளித்துள்ளார். மேலும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை இலாகவை கூடுதல் பொறுப்பாக வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமிக்கு ஒதுக்கீடு செய்ததற்கு ஒப்புதல் அளித்துள்ளார். அதே நேரத்தில், அமைச்சரவை குழுவில் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வதை அனுமதிக்க முடியாது' என தமிழ்நாடு ஆளுநர் தமிழ்நாடு அரசுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: Exclusive: அமைச்சரவையில் இருந்து நீக்க ஆளுநர் வலியுறுத்தலாமா? திமுகவின் அடுத்தக்கட்ட நகர்வு என்ன?