சென்னை: மத்திய அரசு அகவிலைப்படி 4 சதவீதம் உயர்வு அளித்த உடன் ஒடிசா மாநில முதலமைச்சர் அகவிலைப்படி உயர்த்தி அறிவித்துள்ளார். அதேபோல், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிக்க வேண்டும் எனத் தமிழக ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது சம்பந்தமாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "நிதி, மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிற்கு ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணி மூத்த நிர்வாகியுமான அண்ணாமலை எழுதியுள்ள கடிதத்தில், நிதி அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு தங்களின் முன்னிலையில் அகவிலைப்படி உயர்வினை தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்த போது அந்த அறிவிப்பில் இனி மத்திய அரசு அகவிலைப்படி அறிவிக்கிற போதெல்லாம் தமிழ்நாடு அரசு அகவிலைப்படியினை உயர்த்தி அறிவிக்கும் என்ற உறுதியினையும் வெளிப்படுத்தி அறிவித்தார். அப்போது தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் நாங்கள் நேரில் சந்தித்தபோது எங்கள் மகிழ்ச்சியினையும், பாராட்டினையும் தெரிவித்து இருந்தோம்.
மத்திய அமைச்சரவை 4% சதவீத அகவிலைப்படி உயர்வினை 42% சதவீதத்திலிருந்து 46% சதவீதமாக உயர்த்தி ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசின் நிதி செலவினத்துறையில் அதற்கான குறிப்புகளை வெளியிட்டுள்ளார்.மத்திய அரசின் அரசாணை வெளிவராவிட்டாலும், மத்திய அமைச்சரவையின் ஒப்புதலினை பார்வைக்கு எடுத்துக் கொண்டு ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் 1.7.2023 முதல் நிலுவைத் தொகையுடன் 4% அகவிலைப்படி உயர்வினை அறிவித்து ஆணை வழங்கியுள்ளார்.
இதையும் படிங்க: மகளிர் உரிமைத்தொகை திட்ட பயனாளிகள் கவனத்திற்கு.. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
அகவிலைப்படி தொடர்பாகக் கோரிக்கை வைத்தாலும் கோரிக்கை வைக்காவிட்டாலும் இந்த முறை 1.7.2023 முதல் நிலுவைத் தொகையுடன் 42% சதவீதத்திலிருந்து 46% சதவீதமாக உயர்த்தி தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருந்தது.
முதலமைச்சராகக் கருணாநிதி இருந்தபோது முதுகுத் தண்டுவட பிரச்னை காரணமாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அந்த சமயத்தில் மத்திய அரசு அகவிலைப்படியினை உயர்த்தி அறிவித்தனர். நிதித்துறை செயலாளர் ஞான தேசிகன், முதலமைச்சர் கருணாநிதியைச் சந்திப்பதற்குச் சென்ற போது, மத்திய அரசு அகவிலைப்படி உயர்வினை அறிவித்து விட்டனர். எந்த சங்கமாவது அகவிலைப்படி உயர்வினை கேட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்களா? என்று கேட்டார். இதுவரை எந்த சங்கமும் அகவிலைப்படி உயர்வு கேட்டு அறிக்கை வெளியிடவில்லை. என்று நிதித்துறை செயலாளர் பதிலளித்தார்.
அப்படியானால் சங்கங்கள் அகவிலைப்படி உயர்வு கேட்பதற்கு முன்பாகவே அகவிலைப்படி உயர்வினை அறிவித்து ஆணையினை வெளியிடுங்கள் என்று தெரிவித்தவுடன், நிதித்துறை சார்பில் உடன் ஆணையினை வெளியிட்டு பெருமை சேர்த்தார். அந்த நிகழ்வு இன்றளவும் வரலாற்றுப் பதிவில் உள்ளதை தாங்கள் அறியாதது ஒன்றல்ல.
ஒடிசா முதலமைச்சர் வரிசையில் தமிழ்நாடு முதலமைச்சரும் உடனடியாக மத்திய அரசுக்கு இணையான அகவிலைப்படி உயர்வினை நிலுவைத் தொகையுடன் உயர்த்தி ஆணை வழங்கினால். தாங்கள் நிதி அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள காலத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மத்தியில் மீண்டும் நம்பிக்கை ஒளி ஏற்படுவதற்கு வாய்ப்பாக அமையும் என்று நீண்ட காலம் பொது வாழ்வில் தங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற முறையில் தங்களைப் பெரிதும் வேண்டுகிறோம்.” என அதில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: முதலமைச்சர் அனைத்து மதங்களையும் சமமாக மதிப்பவர் என்றால் ‘இதனை’ செய்ய வேண்டும் - வானதி சீனிவாசன் கூறியது என்ன?