கரோனா தொற்று காரணமாக உலகின் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக தேசிய ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது.
இதனால் பிழைப்புத்தேடி வேறு மாநிலத்திற்கும் வெளிநாட்டிற்கும் புலம் பெயர்ந்த தமிழர்கள் வேலையின்றி கஷ்டப்பட்டு வருகின்றனர். இவர்களை மீட்க தமிழ்நாடு அரசு உடனடியாக, நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தி செய்தியறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், 'கரோனா ஊரடங்கால் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாடு தொழிலாளர்களைப் பாதுகாப்பாக மீட்டு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
பல்வேறு பணிகளுக்காக குவைத், மாலத்தீவுகள் உள்ளிட்ட வெளிநாடுகளுக்குச் சென்ற நூற்றுக்கணக்கான தமிழ்நாடு தொழிலாளர்கள் ஊரடங்கால் ஆங்காங்கே சிக்கிக்கொண்டிருப்பதாகத் தகவல்கள் வருகின்றன. விசா காலம் முடிந்து பொதுமன்னிப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளவர்கள், பெருந்தொற்று நோய் பாதிப்பால் வேலையிழந்தவர்கள் என நூற்றுக்கணக்கானோர் சரியான உணவு, இருப்பிட வசதிகள் இன்றி குவைத்தில் தவித்து வருகின்றனர்.
ஒரே இடத்தில் பலரையும் அடைத்து வைத்திருப்பதால், கரோனா தாக்குதலுக்கு ஆளாகிவிடுவோமா என்ற பயமும் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. இதேபோன்று மாலத்தீவுகளில் சிக்கிய தமிழ்நாடு தொழிலாளர்களை அழைத்து வரும் முயற்சி, பழனிசாமி அரசின் பாராமுகத்தால் பாதியிலேயே நின்றுவிட்டதாக வரும் செய்தியும் வருத்தமளிக்கிறது.
வெளிநாடுகளில் மட்டுமின்றி அந்தமான், மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் கூலி வேலைகளுக்குச் சென்ற தமிழர்களும் சொல்ல முடியாத துயரங்களோடு அங்கே தவித்து வருகின்றனர். இவர்கள் அனைவரையும் தமிழ்நாடு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும்.
எனவே, இனியும் தாமதிக்காமல் ஐ.ஏ.எஸ். அலுவலர்கள் தலைமையில் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள சிறப்புக்குழு விரைந்து செயல்பட்டு, வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்டு வருவதற்கானப் பணிகளை முடுக்கிவிட வேண்டும்.
பலர் ஊருக்குத் திரும்புவதற்கான பயணச்செலவுக்குக் கூட பணமில்லாமல் தவிப்பதால், தமிழ்நாடு அரசே அதற்கான பொறுப்பையும் ஏற்க வேண்டும். போக்குவரத்துக்கான ஏற்பாடுகளைச் செய்யும்வரை உணவு, தங்குமிடம், மருத்துவம் ஆகிய அவசர உதவிகள் தமிழ்நாடு தொழிலாளர்களுக்குக் கிடைக்கவும் உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 'மாணவர்களின் உயிரோடு விளையாடக் கூடாது; பொதுத்தேர்வு முடிவைக் கைவிட வேண்டும்'