சென்னை: சென்னை வர்த்தக மையத்தில் மருத்துவத் துறையின் எதிர்காலம் குறித்த கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மருத்துவ மாநாடு ஜன.19 முதல் ஜன.21ஆம் தேதி வரை மூன்று நாள்கள் நடைபெறவுள்ளது. இந்நிலையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தலின் படி, மாநாட்டின் முன்னேற்பாடுகள் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம், எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் இன்று (ஜன.13) நடைபெற்றது.
இதற்குக் கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் தலைமை தாங்கினார், மாநாட்டு ஒருங்கிணைப்பு தலைவர் நாராயணசாமி முன்னிலையில் வகித்தார். தமிழ்நாடு அரசு மற்றும் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் இம்மருத்துவ மாநாட்டினை திறம்பட நடத்துவதற்காக, மருத்துவத்துறையின் பல்வேறு உயர் அலுவலர்களைக் கொண்டு 20க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பன்னாட்டு அளவில் நடைபெறும் இம்மாநாடு குறித்த கையேட்டினையும் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள வலைத்தளத்தினையும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடந்த நவ.17 அன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது “மருத்துவத்துறையின் எதிர்காலம் குறித்த பன்னாட்டு மருத்துவ மாநாடு ஜன.19 முதல் 21 வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. இது நாட்டிலேயே மாநில அரசு நடத்தும் சர்வதேச மாநாடாகும். இதில், மருத்துவக் கண்டுபிடிப்புகளுக்கு அதிநவீன அமர்வுகள் நடைபெறும்.
தேசிய, சர்வதேச அளவில் பல்வேறு மருத்துவ வல்லுநர்கள் தங்கள் மருத்துவ ஆராய்ச்சிகள் மற்றும் கண்டுபிடிப்புகள் குறித்துத் தெரிவிப்பார்கள். இதில், மருத்துவம் சார்ந்த படிப்புகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் தொடர்பான 6 அமர்வுகள் இருக்கும். அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து 23 சர்வதேச வல்லுநர்கள் இதில் பங்கேற்கின்றனர். தமிழகத்தில் பணியாற்றும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்கின்றனர். சிறப்பு விருந்தினராக டபிள்யு ஹெச்.ஓ இயக்குநர் டெட்ரோஸ்க்கு அழைப்பிதழ் அனுப்பியுள்ளோம்.
வெளிநாடுகள் குறிப்பாக ஆஸ்திரேலியாவின் சுகாதாரத் துறை அமைச்சர் கலந்துகொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார் என்றார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளவாறு பன்னாட்டு அளவில் நடைபெறவுள்ள இந்த மாநாடு குறித்து மானிய கோரிக்கையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிடவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 3 நாள்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் மருத்துவர்கள் மற்றும் பொதுமக்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் மேற்கொள்ள மருத்துவ உயர் அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.