சென்னை: வங்கக்கடலில் நவ.27ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இதனால் கடந்த சில நாட்களாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம், காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக மாறி டிசம்பர் 2ஆம் தேதி கரையை கடக்க வாய்ப்புள்ளது என அறிவித்துள்ளது.
இந்நிலையில் புயலை எதிர்கொள்வது குறித்து 12 மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக்கூட்டம் இன்று (டிச.01) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் போது மாவட்ட ஆட்சியர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், செய்துள்ள முன்னேற்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதில் வருவாய் துறை, நகராட்சி துறை, மற்றும் காவல்துறை உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, “ கடந்த 27 ந் தேதி உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தற்பொழுது வங்கக் கடல் பகுதியில் நிலவுகிறது. இதனால் வரும் (டிச.3,4) ஆகியத் தேதிகளில் தமிழகத்தின் பல்வேறுப் பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயலின் தாக்கத்தை எதிர்க் கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துறையின் செயலாளர்கள், துறைத் தலைவர்கள்,மாவட்ட ஆட்சியர்கள் எடுக்க வேண்டும். பாதிப்பிற்கு உள்ளாகும் மக்களுக்கு, முன்கூட்டியே எச்சரிக்கை வழங்கி அவர்களை நிவாரண மையங்களில் தங்க வைக்க வேண்டும். மேலும் நிவாரண முகாம்களில் உணவு, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளதா? என மாவட்ட ஆட்சியர்கள் உறுதிச் செய்ய வேண்டும்.
மழை, வெள்ளக்காலங்களில் மின் கசிவினால் ஏற்படும் பாதிப்பை தடுக்க மின்சார வாரியம் கட்டாயம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். புயல் சின்னம் காரணமாக மரங்கள் விழும் என்கிற காரணத்தால் விழும் மரங்களை அகற்றுவதற்கு போதிய உபகரணங்களுடன் குழுக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் அவசர சிகிச்சைப் பிரிவு செயல்படுவதை உறுதிச் செய்ய வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் பாதிப்பிற்கு உள்ளாகும் பகுதிகளில் பல்துறை மண்டலக் குழுக்களை நிறுத்த வேண்டும். பாதிப்பிற்கு உள்ளாகும் மக்களுக்கு உணவு வழங்கிட சமையல் கூடங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
கனமழையின் போது, போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை நாம் காண்கிறோம். காவல்துறை இதில் சிறப்பு கவனம் செலுத்தி அதிகளவில் போக்குவரத்து காவலர்களை ஈடுபடுத்தி போக்குவரத்து நெரிசலை சரி செய்ய வேண்டும்.
மழைக்காலத்தில் மாவட்ட நிர்வாகம் , மாநகராட்சி, உள்ளாட்சி அமைப்புகள், காவல்துறை, தீயணைப்புத்துறை ஆகியவை ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
கடந்த ஒரு சில நாட்களுக்கு முன் மழை நீர் அதிகம் தேங்கியப் பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி அங்கு தேங்கும் மழைநீரை கூடுதல் மோட்டார் பொருத்தி உடனடியாக அகற்ற வேண்டும். வங்கக் கடலில் உருவாகி உள்ள புயலின் தாக்கத்தை அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்” தெரிவித்தார்.
இதையும் படிங்க: மிரட்ட போகுதா மிக்ஜாம் புயல்..! வானிலை மையம் தெரிவிப்பது என்ன..?