சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று (பிப்.23) தலைமைச் செயலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் தேனி மாவட்டம், உத்தமபாளையம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் , புதுக்கோட்டையில் 5 கோடியே 45 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள வருவாய் வட்டாட்சியர் அலுவலகக் கட்டடங்களை திறந்துவைத்தார் .
2019-2020ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டபடி, வறுமை கோட்டிற்கு கீழ்வாழும் குடும்பங்கள் பயனடையும் வகையில், குடும்பத்தில் வருமானம் ஈட்டும் நபர் இயற்கை மரணம் அடைந்தால் 2 லட்சம் ரூபாயும், விபத்தில் மரணம் அடைந்தால் 4 லட்சம் ரூபாயும் , நிரந்தர உடல் ஊனம் ஏற்பட்டால் 1 லட்சம் முதல் 2 லட்சம் ரூபாய் வரை வழங்கும் வகையில் , புரட்சித் தலைவி அம்மா விரிவான விபத்து மற்றும் ஆயுள் காப்பீட்டு திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைக்கும் அடையாளமாக 9 நபர்களுக்கு விரிவான விபத்து மற்றும் ஆயுள் காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டைகளை வழங்கினார்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் சுனாமியால் மிகவும் பாதிக்கப்பட்ட மீனவக் குடும்பத்தை சேர்ந்த 670 நபர்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கிடும் அடையாளமாக, 7 மீனவக் குடும்பங்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார்.
உட்பிரிவு செய்யப்பட தேவையில்லாத நிலப் பரிவர்த்தனைகளில் பத்திரப்பதிவு முடிவடைந்தவுடன் தானியங்கியாக வருவாய்த்துறைப் பதிவுருக்களில் நிலஉரிமை மாற்றத்தினை ஏற்படுத்தி ( Automatic Mutation) உடனுக்குடன் பட்டாக்களை eservices.tn.gov.in என்ற ' எங்கிருந்தும் எந்நேரத்திலும் ' இணையவழிச் சேவைகள் மூலம் நில உரிமைதாரர்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளும் வசதி தற்போது ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
இந்தத் தானியங்கி முறையிலான பட்டா மாற்றம் செய்யும் வசதியினை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கிவைத்தார். இதன்மூலம், உட்பிரிவு இல்லாத இனங்களுக்கு காலதாமதமின்றி, நிலப்பரிவர்த்தனை முடிவடைந்த உடனேயே பட்டா கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், தலைமைச் செயலாளர் முனைவர் ராஜிவ் ரஞ்சன் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.