வெளிநாடு பயணத்தின்போது போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின்படி, மூன்று நிறுவனங்களின் செயல்பாட்டை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
இதன் மூலம் 1,254 கோடி ரூபாய் முதலீடு கிடைக்கும், 10ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 2,700 கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்படவுள்ள தமிழ்நாடு பாலிமர் தொழில் பூங்காவுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். பின் தமிழ்நாட்டில் தொழில் தொடங்குதல் குறித்த கையேட்டை அவர் வெளியிட்டார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், "தொழிற்சாலைகளின் எண்ணிக்கையில் இந்தியாவிலேயே முதலிடத்தில் தமிழ்நாடு உள்ளது. நாட்டின் இரண்டாவது பெரிய பொருளாதார மண்டலமாக தமிழ்நாடு விளங்குகிறது. கடந்தாண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில் மூன்று லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
அவற்றில் 53 திட்டங்கள் தங்களது செயல்பாட்டைத் தொடங்கியுள்ளன. அமெரிக்காவைச் சேர்ந்த 'ஜோஹோ ஹெல்த்' நிறுவனம் உறுதியளித்த முதலீட்டை விட 16 மடங்கு அதிகமாக முதலீடு செய்துள்ளது. இது, தமிழ்நாட்டின் மீது வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது. தமிழ்நாட்டில் அந்நிய முதலீட்டாளர்கள் தொழில் தொடங்க ஏராளமான தொழில் நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன" என்றார்.
இந்த நிகழ்ச்சியில், தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத், தலைமைச் செயலாளர் சண்முகம், மத்திய வெளியுறவுத் துறை செயலாளர், தமிழ்நாடு தொழில்துறை முதன்மைச் செயலாளர் முருகானந்தம் மற்றும் டென்மார்க், மலேசியா, கொரியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 25க்கும் மேற்பபட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: டெல்டாவில் ஹைட்ரோகார்பன் திட்டங்கள் தொடர்வதா? - மணியரசன் கடும் எதிர்ப்பு