உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தமிழ்நாட்டில் தீவிரமடைந்துள்ளது. அதன் பரவலைத் தடுக்க தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்றியமையா பொருள்களை மட்டும் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் தவிர பிற தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. மத்திய அரசு தற்போது மேலும் சில தொழிற்சாலைகளுக்கு ஊரடங்கிலிருந்து விலக்கு அளித்துள்ளது.
அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் சில தொழிற்சாலைகளை படிப்படியாக இயக்க அனுமதிப்பது தொடர்பாகவும், நோய்த் தொற்று பரவாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் தொழிலதிபர்களுடம் ஆலோசனை நடத்தினார்.
இதில் தமிழ்நாடு டி.வி.எஸ். குழுமத்தின் தலைவர் வேணு சீனிவாசன், முருகப்பா குழுமத்தின் தலைவர் வெள்ளையன், டி.வி.எஸ். & சன்ஸ் நிறுவனத்தின் இணை மேலாண் இயக்குநர் தினேஷ், ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் வெங்கடராமராஜா, தோல் ஏற்றுமதிக் குழுமத்தின் தலைவர் அகீல் அகமது, இந்திய தொழில் கூட்டமைப்பின் தலைவர் ஹரி தியாகராஜன், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் சீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டனர்,
இந்தக் கூட்டத்தில், தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத், தலைமைச் செயலர் சண்முகம், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலர் எஸ். கிருஷ்ணன், தொழில் துறை முதன்மைச் செயலர் நா. முருகானந்தம் உள்ளிட அரசு உயர் அலுவலர்களும் கலந்து கொண்டனர்.