தமிழ்நாடு அரசின் 45ஆவது தலைமைச் செயலராக கிரிஜா வைத்தியநாதன் 2016ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி பொறுப்பேற்றார். இவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் மிக முக்கியமான பல முடிவுகளை எடுப்பதில் உறுதுணையாக பணியாற்றியவர். இவரை, இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு தலைமைச் செயலராக தொடர கால நீட்டிப்பு செய்ய அரசு தரப்பு விரும்பினாலும், கிரிஜா வைத்தியதாதன் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
இவருடைய பதவிக்காலம் வரும் ஜுன் 30ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, புதிய தலைமைச் செயலரை நியமிக்க, தமிழ்நாடு அரசு கவனம் செலுத்திவருகிறது.
புதிய தலைமைச் செயலருக்கான பட்டியலில், ஆளுநரின் செயலர் ராஜகோபால், ஒன்பது ஆண்டுகளாக நிதித்துறை கூடுதல் செயலராக இருக்கும் சண்முகம், உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டி, நெடுஞ்சாலைத் துறை செயலர் ராஜீவ் ரஞ்சன், திட்ட, மேம்பாடு செயலர் சோமநாதன் உள்ளிட்டவர்களின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன. ராஜகோபால் தவிர்த்து மற்ற அனைவரும் அரசின் கூடுதல் தலைமைச் செயலர் ஆவர்.
இதில், அனுபவம் வாய்ந்த ஒருவரை தேர்ந்தெடுத்து அறிவிக்க வாய்ப்பு உள்ளது. ஓய்வுக்குப் பிறகு கிரிஜா வைத்தியநாதனுக்கு தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையராகவோ அல்லது மத்திய அரசு உயர் பதவியோ கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.