சென்னை: திருவான்மியூரைச் சேர்ந்த மகேஷ் என்பவர் கடந்தாண்டு ஜூன் மாதம் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள தொழிற்சாலையை அபகரித்துக் கொண்டதாக ஜெயக்குமார், அவரது மருமகன் நவீன்குமார், மகள் ஜெயப்பிரியா ஆகியோர் மீது மகேஷ் புகார் அளித்தார். இதையடுத்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி வழக்குப்பதிவு செய்தனர்.
கூட்டுச்சதி, அத்துமீறி நுழைதல், பயங்கர ஆயுதங்களைக் கொண்டு வேண்டுமென்றே காயம் ஏற்படுத்துதல், பயங்கர ஆயுதங்களால் கொள்ளையில் ஈடுபடுதல், கொலை மிரட்டல், குற்றம் செய்ய தூண்டுதல் ஆகிய ஆறு பிரிவுகளின்கீழ் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில், ஜெயக்குமாரை கடந்த 25ஆம் தேதி காவல் துறையினர் கைதுசெய்தனர்.
இந்நிலையில், ஆலந்தூர் ஜேஎம்-1 குற்றவியல் நீதிமன்றத்தில் நீதித் துறை நடுவர் வைஷ்ணவி முன்னிலையில் ஜெயக்குமாரை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் ஆஜர்படுத்தியுள்ளனர்.
அப்போது, நீதிமன்றத்தில் ஜெயக்குமார், "இது குடும்பச் சொத்து தொடர்பான வழக்கு. சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏற்கனவே நிலுவையில் உள்ளது. திமுக அரசு தன்மீது வேண்டுமென்று பழிவாங்க வேண்டுமென்று போடப்பட்ட வழக்கு இது.
அண்ணன் தம்பிக்கு இடையே உள்ள ஒரு சொத்துப் பிரச்சினை. இந்த விவகாரத்தில் என்னை எப்படி சேர்க்க முடியும். இது சிவில் வழக்கு, இதில் எப்படி நில அபகரிப்பு வரும்" என வாதிட்டார்.
ஜெயக்குமார் வழக்கறிஞர், "இந்த வழக்கு முழுவதும் அண்ணன் தம்பிக்கு இடையே உள்ள ஒரு சொத்துப் பிரச்சினை. இதில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு எந்தவித தொடர்பும் இல்லை. எனவே, இந்த வழக்கிலிருந்து அவரை விடுவிக்க வேண்டும்.
முன்னாள் அமைச்சராக, முன்னாள் சபாநாயகராக இருந்த தன் மீது 397 கொள்ளை பிரிவு பதிவுசெய்யப்பட்டிருப்பது மிக அநாகரிகமான செயல் என ஜெயக்குமார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு ஜெயக்குமாரை வரும் 11ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க ஆலந்தூர் ஜெ.எம். 1 குற்றவியல் நீதிமன்ற நீதித் துறை நடுவர் வைஷ்ணவி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:அமைச்சர் ஜெயக்குமாரை சிறையில் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம்!