தமிழ்நாட்டில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல், சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பணியாற்றிய ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என ஒரு லட்சம் பேருக்கு தபால் வாக்குகளை தேர்தல் அதிகாரிகள் வழங்கவில்லை என கூறப்படுகிறது. தங்களுக்கு தபால் வாக்குகள் வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையரிடம் இவர்கள் பலமுறை வலியுறுத்தியும், இன்னும் ஒரு லட்சம் ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு தபால் வாக்குகளுக்கான படிவம் வந்து சேரவில்லை என ஆசிரியர்கள் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
இந்நிலையில், தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் தலைவர் மாயவன் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர், அரசு ஊழியர்கள் ஒரு லட்சம் பேருக்கு படிவம் 12 வழங்கப்படவில்லை. இதனை வழங்கி தபால் வாக்களிக்க வாய்ப்பு ஏற்படுத்தித் தர வேண்டும். தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள எங்களின் உரிமையானது பறிக்கப்பட்டுள்ளது. நாங்கள் ஜனநாயக கடமையாற்ற தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தபால் வாக்குகளை வழங்காததுக்கு என்ன காரணம் என்று எங்களுக்குத் தெரியவில்லை. ஒரு வேலை அரசுக்கு எதிராக போராடியதால் வழங்க மறுக்கிறார்களா என்பது குறித்து அவர்கள் தான் கூற வேண்டும். தபால் வாக்குகளை அளிக்க இன்னும் கால அவகாசம் உள்ளதால் வழங்குவதற்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தபால் வாக்குகள் அளிக்காவிட்டால் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து அறிவிப்போம்” என தெரிவித்தார்.