கரோனா வைரஸ் தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக வருகின்ற 31ஆம் தேதிவரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வுகள் மட்டும் திட்டமிட்டபடி நடைபெறும் என அரசு அறிவித்தது. தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள்விடுக்கப்பட்டன. அதனடிப்படையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை மட்டும் அரசு ஒத்திவைத்துள்ளது.
ஆனால், 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மீதமுள்ள தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என முதலமைச்சர் பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், அரசு தேர்வுத்துறை இயக்குநர் உஷாராணி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் எழுதியுள்ள கடிதத்தில், "11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவதற்கு அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் தேர்வர்களின் நலனைக்கருத்தில் கொண்டு கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர் இந்தப் பணியினை மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் தேர்வு தொடங்கும் முன்பு தேர்வு மையங்களில் உள்ள தேர்வறைகள், மேசை, நாற்காலி, இருக்கைகள் ஆகியவற்றில் கிருமி நாசினி தெளிக்கப்பட வேண்டும்.
தேர்வு எழுதுவதற்கு முன்பாக மாணவர்கள் கைகளை சோப்பு, கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதேபோன்று, தேர்வர்கள் தங்களுடன் ஹேண்ட் சானிடைசர் எடுத்து வந்திருந்தால் அதனைத் தேர்வு அறைக்குள் எடுத்துவர அனுமதிக்கலாம்.
சளி, இருமலால் பாதிக்கப்பட்டவர்கள் எவரேனும் முகக்கவசம் அணிந்து வந்தால் முகக்கவசத்துடன் தேர்வு எழுத அனுமதிக்கலாம். தேர்வு அறையில் மாணவர்கள் ஒரு மீட்டர் இடைவெளியில் அமரவைக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 'மக்கள் ஊரடங்கைப் பின்பற்றி அனைவரும் வீட்டில் இருக்க வேண்டும்' - பிரதமர் வலியுறுத்தல்