இது குறித்து தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பிரதமர் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் உரத் தயாரிப்பாளர்களுக்கு தரும் மானியத் தொகை 140 விழுக்காடு உயர்த்தப்பட்டது.
இதன் மூலம் விவசாயிகள் ஒரு மூட்டை பாஸ்பேட் உரத்தைப் பழைய விலைக்கே, அதாவது ரூ.1200க்கே வாங்க முடியும். உரத்திற்கான மூலப்பொருட்களான பாஸ்பாரிக் அமிலம், அம்மோனியா ஆகியவற்றின் விலை, சர்வதேச அளவில் உயர்ந்து வருகிறது.
விலை உயர்வு அதிகமாக இருந்தாலும், விவசாயிகள் பாதிக்கப்படக்கூடாது, அவர்களுக்குப் பழைய விலையிலேயே உரம் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று பிரதமர் வரலாற்று சிறப்புமிக்க முடிவை எடுத்துள்ளார்.
இதுவரை விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட ரூ.500 ஆக இருந்த உர மானியமானது, ரூ.1200 ஆக உயர்த்தப்பட்டது. இது 140 விழுக்காடு உயர்வாகும். சர்வதேச அளவில் விலை உயர்வு மிக அதிகம் என்றாலும், விவசாயிகள் டி.ஏ.பி உரத்தை பழைய விலையான ரூ.1200க்கே வாங்க ஏதுவாக, கடன் சுமையை விவசாயிகள் மேல் திணிக்காமல், மத்திய அரசே அதை ஏற்க முடிவு செய்துள்ளது. ஒரு மூட்டை உரத்திற்கான மானியம் இந்த அளவு உயர்த்தப்பட்டது இந்தியாவில் இதுவே முதல் முறை.
கடந்த ஆண்டு ஒரு மூட்டை டி.ஏ.பி உரத்தின் விலை ரூ.1,700 ஆகும். இதில் ரூ.500ஐ மத்திய அரசு மானியமாக வழங்கியது. இதனால் உர நிறுவனங்கள் விவசாயிகளுக்கு ரூ.1,200இல் விற்பனை செய்து வந்தன.
சமீபத்தில் டி.ஏ.பி உரத்திற்கான மூலப் பொருட்களான அம்மோனியம், பாஸ்பாரிக் அமிலம் ஆகியவற்றிற்கான விலை, சர்வதேச அளவில் 60 விழுக்காடு முதல் 70 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது.
இதனால் ஒரு மூட்டை டி.ஏ.பி உரத்தின் விலை ரூ.2,400 ஆக உயர்ந்துள்ளது. 500 ரூபாய் மானியம் கழித்தால், விவசாயிகள் ரூ.1,900க்கு வாங்க வேண்டி இருக்கும். மத்திய அரசு எடுத்த சிறப்பு மிக்க முடிவால், விவசாயிகள் பழைய விலையான ரூ.1,200க்கே உரத்தை வாங்கிக் கொள்ளலாம்.
“மத்திய அரசு விவசாயிகள் நலன் சார்ந்த அரசாகும். விலை உயர்வால் விவசாயிகள் பாதிக்கப்படாமல், அவர்களின் சுமையை அரசே ஏற்றுக் கொள்ளும்” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு வருடமும் ரூ.80,000 கோடி அளவில், மத்திய அரசு உரத்திற்கான மானியத்தை வழங்கி வருகிறது. தற்போதைய விலை ஏற்றத்தை கருத்தில் கொண்டால், மத்திய அரசு கூடுதலாக ரூ.14,175 கோடி மானியமாக வழங்குகிறது.
பிரதமர் நரேந்திர மோடி, மே 14 அன்று பிரதம மந்திரி விவசாய ஊக்க உதவி திட்டத்தின் கீழ் ரூ.20,667 கோடி தொகையை, 9.5 கோடி விவசாயிகளுக்கு உதவித் தொகையின் முதல் தவணையை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தினார்.
இதைத் தொடர்ந்து விவசாயிகள் நலனிற்காக எடுக்கப்பட்ட மிகப் பெரிய முடிவு, தற்போதைய உர மானியமாகும். உரமானியம் இந்த அளவிற்கு உயர்த்தப்படிருப்பது வரலாற்றில் இது முதல் முறை.
விவசாயிகளுக்கு பாஸ்பேட் உரங்கள் குறைந்த விலைக்கு கிடைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு, பிரதமர் எடுத்துள்ள முடிவிற்கு தமிழ்நாடு விவசாயிகள் சார்பிலும், தமி்ழ்நாடு பாஜக சார்பிலும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.