சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்றைய முன்தினம் (அக்.9) தொடங்கியது. அன்றைய நாளின் முடிவில் நடத்தப்பட்ட அலுவல் ஆய்வுக் கூட்டத்தின் இறுதியில், புதன்கிழமை (அக்.11) வரை மட்டும் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். இதன்படி, நேற்று (அக்.10) சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் நடைபெற்றன.
இந்த நிலையில், நடப்பு ஆண்டின் இரண்டாம் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இறுதி நாள் நிகழ்வுகள் இன்று (அக்.11) நடைபெறுகின்றன. காலை 10 மணிக்கு தொடங்கும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கேள்வி - பதில் நடத்தப்படும். இதில், சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளிப்பர். தொடர்ந்து, வேளாண் துறை மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட சில துறைகளின் முக்கியமான சட்டமுன்வடிவுகள் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
முக்கியமாக, வேளாண் திருத்தச் சட்டமுன்வடிவு, ஆட்டோ கட்டணத்தை முறைப்படுத்தும் சட்டமுன்வடிவு ஆகியவை அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதனையடுத்து, இன்றைய நாளோடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் நிகழ்வுகள் நிறைவு பெறும். மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முக்கிய முடிவுகளை தாக்கல் செய்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, நேற்றைய முன் தினம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரின் முதல் நாளில் மறைந்த சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் முதலமைச்சர்கள் மற்றும் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
இதனையடுத்து, கேள்வி - பதில் நேரம் தொடங்கியது. தொடர்ந்து, காவிரி விவகாரம் தொடர்பாக மத்திய அரசை வலியுறுத்தி கொண்டு வரப்பட்ட தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதற்கு, பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் தவிர மற்ற உறுப்பினர்கள் ஆதரவு அளித்தனர்.
மேலும், நேற்றைய தினம் நடைபெற்ற இரண்டாம் நாள் சட்டப்பேரவை கூட்டத்தொடரில், முதலில் மறைந்த சட்டமன்ற உறுப்பினருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. அடுத்ததாக, கேள்வி - பதில் நேரம் தொடங்கியது. அப்போது, சிறையில் பல ஆண்டுகளாக இருக்கும் இஸ்லாமிய சிறைக்கைதிகளை விடுவிப்பது தொடர்பாக அதிமுக தரப்பில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து, இதன் மீது அதிமுக - திமுக இடையே கடுமையான காரசார விவாதம் நடைபெற்றது.
இதன் முடிவில், சரியாக பேச நேரம் அளிக்கவில்லை எனக் கூறி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அவையை விட்டு வெளியேறினர். மேலும், மகளிர் உரிமைத்தொகை தொடர்பாக அதிமுக தரப்பில் வைக்கப்பட்ட கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: காலை சிற்றுண்டி மற்றும் மதிய உணவு பராமரிப்பை கண்காணிக்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்!