தமிழ்நாட்டில் பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் 2019-20க்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் பிப்ரவரி 14ஆம் தேதி வரை நடந்தது. இதனையடுத்து சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
ஏப்ரல், மே மாதம் மக்களவை, சட்டப்பேரவைக்கான தேர்தல் பணிகள் நடைபெற்றதால் மானியக் கோரிக்கை கூட்டம் நடத்தப்படாமல் இருந்தது.
இந்நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியானதையொட்டி மானியக் கோரிக்கைகள் நடத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. எனவே, சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஜூன் 10ஆம் தேதி தொடங்கி ஒரு மாதகாலம் வரை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்தக் கூட்டத்தில் துறை வாரியாக மானியக் கோரிக்கை மீது விவாதம் நடத்தப்பட்டு நிதி ஒதுக்கப்படும் என கூறப்படுகிறது. கூட்டத்தொடரில் சபாநாயகர் மீது திமுக கொண்டுவந்துள்ள நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பும் நடைபெற உள்ளது.
தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் சபாநாயகர் பதவி பறிபோகுமா, தப்பிக்குமா என்பது வாக்கெடுப்பில்தான் தெரியவரும் என்பதால் தமிழ்நாடு அரசியலில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.