சென்னை விருகம்பாக்கம் பகுதியில் வசித்துவந்த முதுபெரும் காங்கிரஸ் தலைவரான கே.துளசி வாண்டையார் இன்று (மே.17) காலை மாரடைப்பால் உயிரிழந்தார். இவருக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
வாண்டையாரின் மறைவு ஆற்ற இயலாதது!
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்ட இரங்கல் செய்தியில், ’பெருமதிப்பிற்கு உரிய பெருந்தகை துளசி வாண்டையார், இயற்கை எய்திய செய்தி அறிந்து, அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். 94 வயதான அவர், நூறாண்டு கடந்து வாழ்வார் என்று கருதி இருந்தேன். அவரது மறைவு, ஆற்ற இயலாதது. பழம்பெரும் தலைவர்களை, அண்மைக்காலமாக இழந்து கொண்டே வருகின்ற அதிர்ச்சியை, தாங்குவது அல்லாமல், வேறு வழி இன்றி, தவிக்கின்றது தமிழ்நாடு. அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், அவரால் பயன் பெற்றவர்களுக்கும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் பேரியக்க வளர்ச்சியில் பெரும்துணை!
கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள இரங்கல் செய்தியில், ’முதுபெரும் காங்கிரஸ் தலைவர் துளசி வாண்டையார் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவராகவும், தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினராகவும் பொறுப்பு வகித்து மிகச் சிறப்பாகச் செயல்பட்டவர். அனைத்துத் தரப்பு மக்களின் நன்மதிப்பைப் பெற்ற மிகச்சிறந்த அறிஞர், ஆன்மிகவாதி. பழகுவதில் இனிய பண்பாளர். காங்கிரஸ் பேரியக்க வளர்ச்சியில் பெரும்துணையாக இருந்த துளசி வாண்டையார் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது மகன் கிருஷ்ணசாமி வாண்டையாருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் மற்றும் காங்கிரஸ் நண்பர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்து இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
கல்வி வள்ளல் வாண்டையார்!
அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியின் ட்விட்டர் பதிவில், ’கல்வி வள்ளலாகவும், டெல்டா மக்களின் பேரன்பை பெற்றவருமாக திகழ்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பூண்டி துளசி வாண்டையார் இன்று இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். பூண்டி துளசி வாண்டையாரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம், முன்னாள் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் துளசி வாண்டையாரின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:கல்வி வள்ளல் கே. துளசி வாண்டையார் மறைவு வருத்தமளிக்கிறது: டிடிவி தினகரன்