சென்னை கொருக்குப்பேட்டையில் நேற்று மாலை (நவ.03) இருசக்கர வாகனத்தில் சென்றபோது, மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததில் மூன்று வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். மாஞ்சா நூலைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட நிலையில், தடையை மீறி பட்டம் விட்ட கொருக்குப்பேட்டை நாகராஜ், 15 வயது சிறுவன் உட்பட இரண்டு பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில், இச்சம்பவம் குறித்து சென்னை வடக்கு கூடுதல் ஆணையர் தினகரன் கூறுகையில், "மாஞ்சா நூல் பயன்படுத்துவது சென்னையில் தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், மூன்று வயது சிறுவன் மாஞ்சா நூலில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் வருத்தமளிக்கிறது.
மாஞ்சா நூல் விற்பனை குறித்து விசாரிக்க சென்னை முழுவதும் தனிப்படையினர் 15 குழுக்களாக அமைக்கப்பட்டு தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் மாஞ்சா நூல் விற்பனை செய்பவர்கள், மஞ்சா நூல் பயன்படுத்தி பந்தயம் விடுபவர்கள் மீதும் குண்டர் சட்டம் போன்ற கடுமையான சட்டங்கள் பாய்வதோடு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்று எச்சரிக்கை விடுத்தார்.
இதற்கிடையில், சிறுவனை மாஞ்சா நூல் அறுக்கும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மாஞ்சா நூலால் உயிரிழந்த சிறுவன்: பதறவைக்கும் சிசிடிவி காட்சி!