சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் "ஸ்பீக்கிங் ஃபார் இந்தியா" (Speaking for India) என்ற பெயரில் பாட்கேஸ்ட் மூலம் ஆடியோ வடிவில் மக்களிடம் பேசிவருகிறார். இந்த பாட்கேஸ்ட் தமிழ் மொழியை தவிர இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய ஐந்து மொழிகளிலும் வெளியாகிறது.
இந்நிலையில், இந்த பாட்கேஸ்டின் 4வது தொடர் வெளியாக உள்ள நிலையில், அதில் 3 மாநில முதலமைச்சர்கள் இணைந்து பேச உள்ளதாக தகவல் வெளியாகிய நிலையில், யார் யார் அந்த முதலமைச்சர்கள் என்ற பெரும் எதிர்பார்ப்பு அரசியல் களத்தில் ஏற்பட்டுள்ளது.
மேலும்,"அரசியல் சட்டத்தின் மாண்புகளை சிதைக்கும் ஆளுநரின் அத்துமீறல்கள்" என்ற தலைப்பில் இந்த உரைத்தொடர் இருக்கிறது என்ற அறிவிப்பு கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக ஆளுநர் மட்டுமன்றி, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் உள்ள ஆளுநர்கள் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருக்கும் நிலை, உச்ச நீதிமன்றம் வர சென்றுள்ள சூழலில், இந்த நான்காம் உரைத்தொடர் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என கூறப்படுகிறது.
2021ம் ஆண்டு செப்டம்பர் 18ம் தேதி தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என். ரவி பதவியேற்றதிலிருந்தே, அவருக்கும் தி.மு.க. அரசுக்கும் இடையிலான உறவு சுமுகாக இருந்ததில்லை. அதைத் தொடர்ந்து ஆளுநரின் சர்ச்சைக்குறிய செயல்பாடுகளால், அரசுக்கும் ராஜ் பவனுக்குமான மோதல் தொடர்கதையாக இருந்து வருகிறது.
மேலும், ஆளுநரை மாற்ற வேண்டும் என தி.மு.க. மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறது. இதேபோல, பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் ஆளுநர்கள் சர்சைக்குறியவர்களாக இருப்பது பெரும் விவாதமாக மாறியுள்ளது. குறிப்பாக கேரளா, மேற்கு வங்காளம், பஞ்சாப், டில்லி போன்ற மாநிலங்களில், முதலமைச்சர்களுக்கும் ஆளுநர்களுக்கும் சுமுகமான உறவு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
"ஸ்பீக்கிங் ஃபார் இந்தியா" (Speaking for India) முதல் தொடரில் குஜராத் மாடல், 2024ம் ஆண்டு பொதுத் தேர்தல் உள்ளிட்டவை குறித்து மு.க ஸ்டாலின் பேசினார். அதைத் தொடர்ந்து, 2ம் தொடரில் மத்திய அரசின் திட்டங்களில் நடைபெற்ற ஏழரை லட்சம் கோடி ரூபாய் முறைகேடுகள் குறித்த சிஏஜி அறிக்கை குறித்த விமர்சனத்தை முன்வைத்தார்.
இதைத் தொடர்ந்து வந்த 3ம் தொடரில் குஜாரத்தை பற்றியும் மாநில சுயாட்சி குறித்தும் எடுத்துரைத்தார். இந்நிலையில், விரைவில் வெளியாகும் 4வது தொடரில் 3 மாநில முதலமைச்சர்கள் உரையாற்றுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த மூன்று மாநில முதலமைச்சர்கள் யார் யார் என எதிர்பார்ப்பு தமிழக மட்டுமின்றி இந்திய அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. குறிப்பாக, நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என கூறப்படுகிறது.
யார் அந்த முதலமைச்சர்கள்?: "ஸ்பீக்கிங் ஃபார் இந்தியா" 4வது தொடரின் தலைப்பாக இருப்பது, "அரசியல் சட்டத்தின் மான்புகளை சிதைக்கும் ஆளுநரின் அத்து மீறல்கள்." இந்நிலையில், இந்த 3மாநில முதலமைச்சர்களும் ஆளுநரின் நெறுக்கடிக்கு ஆளாகி இருக்கும் மாநில முதலமைச்சர்களாக தான இருக்க கூடும் என கணிப்பு எழுந்துள்ளது.
அதன் அடிப்படையில் யார் என்று பார்த்தால், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகிய 4- முதலமைச்சர்களாக தான் இருக்ககூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனென்றால் இந்த 4 மாநிலங்களிலும் ஆளுநர்கள் மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் இருக்கிறது. மேற்கு வங்க உள்ளாட்சி தேர்ததில் ஏற்பட்ட கலவரம் முதல் கேரள ஆளுநர் முகமது ஆரிஃப் கான் 7 மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது வரை பல நிகழ்வுகள் இருக்கிறது என்பது குறிப்பிடதக்கது.
இந்நிலையில், தமிழக முதலமைச்சருடன் இணையவிருக்கும் மூவர் யார் என்பதும், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கு எவ்விதம் வலு சேர்க்கும் என்பதும் மேலும், இதில் திமுகவின் வியூகம் என்ன என்பது குறித்து இந்த 4ம் பாட்காஸ்டில் வெளிப்படும் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: காவல் துறையில் சங்கம் அமைக்க வலியுறுத்தி வீடியோ வெளியிட்ட காவலருக்கு கட்டாய பணி ஓய்வு!