சென்னை குரோம்பேட்டை ரயில் நிலையம் அருகே கஞ்சா விற்பனை நடந்து வருவதாக பரங்கிமலை போதை பொருள் தடுப்பு பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அத்தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் 2 தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில், குரோம்பேட்டை ரயில் நிலையம் அருகில் மூன்று நபர்கள் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து விசாரணை செய்ததில் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர்.
அப்போது அவர்கள் வைத்திருந்த இரண்டு இருசக்கர வாகனத்தை சோதனை செய்தபோது, இருசக்கர வாகனத்தின் இருக்கையின் அடியில் 2 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து, கஞ்சா விற்பனை செய்த மூன்று பேரையும் குரோம்பேட்டை காவல் நிலையத்தில், போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் ஒப்படைத்தனர்.
தொடர்ந்து குரோம்பேட்டை காவல் துறையினர் விசாரணை செய்ததில், “இவர்கள் கூடுவாஞ்சேரி சேர்ந்த முத்துலிங்கம்(28), குரோம்பேட்டை பகுதியை சேர்ந்த பாஸ்கர் (21), ஊரப்பாக்கத்தை சேர்ந்த சரவணன் (34) என்பது தெரியவந்தது. இவர்கள் 3 பேரும் ஒரே தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்ததாகவும், கரோனா ஊரடங்கால் வேலை இல்லாமல் ஆந்திரா கடப்பாவிற்கு சென்று கஞ்சா வாங்கி வந்து விற்பனை செய்து வந்ததாகவும் தெரியவந்தது. இதனையடுத்து இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, தாம்பரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: சென்னையில் நூதன முறையில் உயர் ரக கேமரா திருட்டு!