சென்னை: ஆறுமுகசாமி ஆணையத்தில் இரண்டாவது நாளாக இன்று (மார்ச் 22) அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆஜராகி விளக்கமளித்து வருகிறார்.
டிசம்பர் 04ஆம் தேதி ஆளுநர் ஜெயலலிதாவை சந்திக்காமல், அப்போலோ மருத்துவமனை குழுமத் தலைவரை சந்தித்தது குறித்த கேள்விக்கு, தனக்கு நினைவில்லை என அவர் பதிலளித்துள்ளார்.
ஜெயலலிதாவிற்கு இதயம் செயல் இழந்த பின் மீண்டும் இதயத்துடிப்பை தூண்டும் சிபிஆர் சிகிச்சை செய்யப்பட்டதா என்ற கேள்விக்கும் தனக்கு நினைவில்லை எனப் பதிலளித்துள்ளார். ஆனால், மாலை 05.30 மணிக்கு எக்மோ பொருத்தப்பட்டது தொடர்பாக அப்போதைய சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தன்னிடம் தெரிவித்தாக அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக டிசம்பர் 5ஆம் தேதி ஜெயலலிதாவிற்கு இறப்பதற்கு முன்பு தான், நான் உட்பட மூன்று அமைச்சர்கள் நேரில் சென்று பார்த்தோம் என்று ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேலும் உயிர் காக்கும் கருவியான எக்மோ கருவி ஜெயலலிதா உடலில் இருந்து எடுக்கும் முன் பார்த்தேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது ஓ.பன்னீர்செல்வத்திடம் ஆணையம் விசாரணை நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, சசிகலா தரப்பிடம் குறுக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: 'பீஸ்ட்' திரைப்படம் - ஏப்ரல் 13 ஆம் தேதி ரிலீஸ்