சென்னை குரோம்பேட்டை பகுதியை அடுத்த அஸ்தினாபுரம் நேதாஜி நகரில், நெமிச்சேரி ஏரிக்கரையை ஒட்டிய குடிசை வீடு ஒன்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அந்த வீட்டில் இருந்த கேஸ் சிலிண்டர் வெடித்து தீ வேகமாக பரவியது. இதனால் பக்கத்து வீடுகளுக்கும் தீ பரவியது. இந்த விபத்து குறித்த தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தாம்பரம் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முயன்றபோது, மேலும் இரண்டு கேஸ் சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்தன.
இதில் ரவிகுமார் என்ற தீயணைப்பு வீரருக்கு காலிலும் தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டதில் அவர் மயக்கமடைந்தார். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.
அப்பகுதியைச் சேர்ந்த கார் மெக்கானிக் வெங்கடேசன் (25) அருகில் வசிக்கும் ஆட்டோ ஓட்டுனர் செல்வகுமார் (30) இருவருக்கும் கால் உடைந்து பலத்த காயத்துடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் அப்பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த 500க்கு மேற்பட்ட மக்கள் சாலையில் கூடியதால் பதற்றம் நிலவியது. இதனை அறிந்து அங்கு விரைந்த சிட்லபாக்கம் காவல் ஆய்வாளர் சந்திரசேகர் தலைமையிலான காவல்துறையினர் தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: திருமணத்தை மீறிய உறவு: கணவன் தற்கொலை!