தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்காக மூன்று பேரின் பெயர்களை பரிந்துரைக்க, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் தேர்வுக்குழுவை தமிழ்நாடு அரசு நியமித்தது. இக்குழுவில் தேசிய சட்டப் பல்கலைக்கழகப் பேராசிரியர் கமலா, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் தர்வேஷ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும், அதற்கு தடை விதிக்கக்கோரியும், சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சந்திரபோஸ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். அவர் தனது மனுவில், 'பல்கலைக்கழகத்துடன் எந்த விதத்திலும் தொடர்பு இல்லாதவர்களையே தேர்வுக் குழுவில் நியமிக்க வேண்டும் என பல்கலைக்கழகம் விதிகளை அறிவித்தது.
இந்த விதிகளில் 2004 முதல் 2007ஆம் ஆண்டு வரை துணைவேந்தராக இருந்த தர்வேஷை, இக்குழுவில் இணைத்திருப்பது தவறு; இதனால் துணைவேந்தர் தேர்வு பாரபட்சமாக இருக்கும்' எனவும் அச்சம் தெரிவித்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, குறிப்பிட்ட தனி நபரை குழுவில் இணைத்ததற்கு எதிராக மனுதாரர், இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளதால், தேர்வுக் குழு நியமனத்தில் தலையிட எந்த அவசியமும் இல்லை எனக் கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: கல்லுக்குழி பகுதியில் ஆய்வு மேற்கொண்ட கமல் ஹாசன்