சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் சிவசங்கரன் நகரில் மனைவி, குழந்தைகளுடன் வசித்து வருபவர் அஜித் குமார் (23). இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று (பிப். 10) இரவு அஜித்குமார் பொழிச்சலூர் பகுதியிலுள்ள மதுபான கடையில் மது வாங்குவதற்காகச் சென்றுள்ளார்.
அப்போது, அங்கு மது வாங்க வந்த அப்பு (எ) ராஜேஷ் குமார் (22) என்பவருக்கும் அஜித் குமாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு, கைகலப்பு ஏற்பட்ட நிலையில், அருகில் இருந்தவர்கள் தடுத்து இருவரையும் அனுப்பியுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த ராஜேஷ்குமார் அவரின் நண்பர்களான அருண்குமார் (20), சதீஷ்குமார்(21) ஆகிய இருவரையும் அஜித்குமார் வீட்டிற்கு அழைத்துச் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதையடுத்து, அவர்கள் மூவரும் மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பிகளை கொண்டு அஜித்குமாரை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதைக்கண்ட அஜித்குமாரின் உறவினர் அண்ணாதுரை என்பவர் அவர்களை தடுக்க முயன்றபோது, அவரையும் இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர். இதில், ரத்த வெள்ளத்தில் இருவரும் கீழே விழுந்த நிலையில், மூவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
பின்னர் பலத்த காயமடைந்த இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து சங்கர் நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், பொழிச்சலூர் பகுதியில் பதுங்கி இருந்த மூவரையும் காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: திருவள்ளூரில் 2ஆவது மனைவியை அடித்துக் கொன்ற கணவன் கைது