சென்னை மாநகரத்தில் 35 மகளிர் காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மகளிர் காவல் நிலையங்கள் அனைத்தும் பெண்கள், குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவுடன் இணைக்கப்பட்டு துணை ஆணையர் ஜெயலட்சுமி தலைமையில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்களை தடுக்கும் நோக்குடன் சென்னை மாநகர காவல் துறையில் ’தோழி’ என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின்படி, ஒவ்வொரு மகளிர் காவல் நிலையத்திலும், இரண்டு பெண் காவலர்கள் தேர்வு செய்யப்பட்டு பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான குற்றங்களை கையாள்வது, குழந்தைகளிடம் பயத்தைப் போக்கி விவரங்களைக் கேட்டுப் பெறுவது, பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அறிவுரை வழங்குவது உள்ளிட்ட பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மகளிர் காவல் நிலையங்களில், பெண் காவலர்கள் காவல்துறை சீருடையுடன் இருப்பார்கள். ஆனால் இந்த ’தோழி’ திட்டக்காவலர்கள், ‘Pink’ நிற புடவை அணிந்திருப்பார்கள். மேலும், ’நிர்பயா’ என்ற வாசகத்துடன் ’பேட்ஜ்’ ஒன்றையும் அணிந்திருப்பார்கள்.
இத்திட்டத்தை தொடங்கி வைத்துப் பேசிய சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், ”இந்தியாவிலேயே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு, பாதுகாப்பான நகரமாக சென்னை மாநகரம் விளங்குகிறது. இத்திட்டமானது ’போக்சோ’ சட்ட விதிமுறைகளின்படி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் காவலர்கள் பெரும் கருணையோடு பாதிக்கப்பட்டவர்களை அணுக வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்
துணை ஆணையர் ஜெயலட்சுமி கூறுகையில்,”சென்னையில் உள்ள 35 காவல் நிலையங்களில், இதற்கென 72பெண் காவலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்தப்பிரிவு தொடங்கப்பட்ட பின்னர் 29 வரதட்சணைக் கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பெண் காவலர்களுக்கு இன்று ஒருநாள் முழுவதும் இது குறித்தப் பயிற்சி அளிக்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: ’காவி’ நிறத்திற்கு புதிய விளக்கம் அளிக்கும் வானதி சீனிவாசன்!