சென்னை: கடந்த 18ஆம் தேதி மெரினாவில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட இரண்டு சிறுவர்கள் உள்பட 8 பேரை சென்னை போக்குவரத்து காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்கள் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் பைக் சாகசத்தில் ஈடுபடக்கூடிய கும்பல் இன்ஸ்டாகிராம் மூலமாக ஒன்றிணைந்து ஒரு குழுவாக செயல்பட்டு வருவதை சென்னை போக்குவரத்து காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.
மேலும், இன்ஸ்டாகிராமில் உள்ள பல்வேறு பைக் சாகச குழுக்கள், தங்களுக்கென இன்ஸ்டா பக்கத்தை தொடங்கி, அவர்கள் செய்யும் சாகசங்களை பதிவேற்றம் செய்துவருவதும் தெரியவந்துள்ளது. பைக் சாகசம் செய்த இளைஞர் கைது செய்த பின்னரும், தொடர்ந்து போக்குவரத்து காவல் துறையினருக்கு சவால்விடும் வகையில் சிலர் பைக் சாகசத்தில் ஈடுபட்டதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பைக் வீலிங் : குறிப்பாக கடந்த இருபத்தி ஒன்றாம் தேதி வியாசர்பாடி டாக்டர் அம்பேத்கர் அரசு கல்லூரி அருகே ஐந்து பேர் சாகசத்தில் ஈடுபட்டனர். இவர்கள் பாடியில் இருந்து ராயபுரம் மேம்பாலம் வரை பைக் வீலிங்-இல் ஈடுபட்டனர். இது தொடர்பான வீடியோ காட்சிகளை சென்னை போக்குவரத்து காவல்துறையினர் கைப்பற்றி தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் வண்டி எண்களை வைத்து, அந்த ஐந்து பேரையும் காவல்துறையினர், மார்ச் 22ஆம் தேதி கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ஐந்து பேரில் ஒருவர் சென்னை காவல் துறையில் பணியாற்றும் சிறப்பு உதவி ஆய்வாளரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் கைது செய்யப்பட்டவர்கள் மீது, மரணத்தை விளைவிக்கும் குற்றச்செயலில் ஈடுபட முயற்சித்தல் மற்றும் மோட்டார் வாகன சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கடந்த நான்கு நாட்களில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 3 பேர் சிறார்கள். அவர்களிடமிருந்து 21 விலை உயர்ந்த இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைதானவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு தகவல்கள் கிடைத்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .
இன்ஸ்டா குரூப் : குறிப்பாக இந்த பைக் வீலிங் கும்பல் இன்ஸ்டாகிராம் மூலமாக செயல்பட்டு வருவது தெரிய வந்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே கடந்த 18ஆம் தேதி பைக் வீலிங் ஈடுபட்ட கும்பல் கைதான பிறகு காவல்துறையினருக்கு சவால் விடுக்கும் வகையில் தற்போது கைதாகி இருக்கக்கூடிய கும்பல் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை பதிவிட்டு இருக்கிறது. அதை வைத்துதான் இந்த கும்பலின் செயல்பாடுகள் குறித்து காவல்துறையினர் கண்டறிந்து கைது செய்துள்ளனர்.
சென்னையில் புறநகர் பகுதிகளான தாம்பரம் ஆவடி போன்ற இடங்களில் உள்ள காலியிடங்களில் இந்த பைக் சாகச கும்பல் பைக் சாகச பயிற்சியில் ஈடுபடுவதும், அங்கிருந்து புறப்பட்டு சென்னையில் உள்ள முக்கிய இடங்களில் தங்களது சாகசங்களை செய்து அதை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி வைத்திருப்பதும் தெரியவந்துள்ளது.
தொடர்ந்து காவல்துறையினர் பைக் வீலிங் கும்பலை கைது செய்து வரக்கூடிய சூழ்நிலையில், “யாரும் பைக் வீலிங் ஈடுபடவேண்டாம், காவல்துறை கைது நடவடிக்கை எடுத்து வருகிறது” என இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸில் பைக் வீலிங் கும்பல் ஒரு பதிவை பதிவிட்டு இருக்கிறது. அதனையும் காவல்துறையினர் கைப்பற்றி உள்ளனர்.
நூறு ஐநூறு தானே : மேலும் சைபர் கிரைம் காவலர்கள் உதவியோடு, இன்ஸ்டாகிராமில் குழு அமைத்து இருக்கக்கூடிய பைக் வீலிங் கும்பல்கள் எத்தனை பேர், அவருடைய செயல்பாடுகள் என்னென்ன, எங்கே அவர்கள் ஒன்றிணைந்து சந்தித்துக்கொள்கிறார்கள், அதேபோல எந்தெந்த நாட்களில் இவர்கள் பயிற்சியில் ஈடுபடுகிறார்கள், இவர்களுக்கு பைக் தயார் செய்து கொடுக்கக் கூடிய மெக்கானிக்குகள் யார், என்பது தொடர்பாக கண்டறியும் பணியில் சென்னை போக்குவரத்து காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
பைக் சாகசத்தில் ஈடுபடும் இளைஞர்களின் வாகனங்களில், அவர்களுக்கு ஏற்றது போல் மாற்றம் செய்து தரும் மெக்கானிக்கல் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எஎ சென்னை போக்குவரத்து காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். பைக் சாகசத்தில் ஈடுபட்டு தற்போது கைதாகி உள்ள இளைஞர்களிடம், “பைக் ரேஸில் ஈடுபடுவது தவறு என்பது தெரியாதா” என காவல்துறையினர் கேட்டபொழுது, “100 முதல் 500 ரூபாய் அபராதம் மட்டுமே விதிப்பார்கள் என நினைத்து இதுபோன்ற சாகசத்தில் ஈடுபடுவோம்” என தெரிவித்துள்ளனர்.
ஆனால் தற்போது சிறை செல்லும் அளவிற்கு இவர்களின் மீது போடப்பட்ட வழக்கின் தீவிரம் குறித்து இந்த இளைஞர்களுக்கு தெரியாதது வருத்தம் அளிப்பதாகவும், இந்த வழக்கு அவர்கள் வாழ்நாள் வரை தொடர்ந்து வரும் எனவும், வேலை தேடிச் செல்லும்போது இந்த வழக்கு அவர்களுக்கு ஒரு கரும்புள்ளியாக இருந்து பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும் என்றும் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். எனினும் தொடர்ந்து இதுபோன்று பைக் சாகசத்தில் ஈடுபடுவோருக்கு இது ஒரு எச்சரிக்கையாக இருக்கும் எனவும் காவல்துறையினர் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: பைக் ரேஸ் செய்து அட்டூழியம்: காவல் உதவி ஆய்வாளரின் மகன் உள்பட 5 பேர் கைது