சென்னை: ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் தொழிலாளர் துறை அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு எட்டப்படவில்லை என ஜன.9ஆம் தேதியான இன்று முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடப் போவதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தன.
பொங்கல் பண்டிகை வரும் சமயத்தில் இப்போராட்டம் நடைபெற்றால் பொதுமக்கள் பயணம் மேற்கொள்வதில் அதிக இடையூறுகள் வரும் என அமைச்சர் சிவசங்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் கடந்த ஜன.5ஆம் தேதி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்.
அதனைத் தொடர்ந்து, கோரிக்கைகள் நிறைவேற்றுவது தொடர்பாக நிதித்துறையுடன் கலந்து ஆலோசித்துதான் முடிவு எடுக்க முடியும் என்பதால், நாளை (ஜன.10) மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் எனவும், அனைத்து கோரிக்கையையும் ஒரே நாளில் எட்டிவிட முடியாது எனவும், பேசி முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.
இதனிடையே, போக்குவரத்து தொழிலாளர்கள் திட்டமிட்டபடி வேலை நிறுத்தத்தைத் தொடங்கினாலும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சிறப்பு பேருந்து இயக்குவதில் எந்த தடங்கலும் ஏற்படாவண்ணம், தற்காலிக ஓட்டுநர்கள் மூலம் முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக தொ.மு.ச பேரவை பொதுச் செயலாளர் மு.சண்முகம் எம்.பி வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு 15-வது ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை துவக்கப்பட வேண்டும். போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அதிமுக ஆட்சியாளர்களால் வழங்கப்படாத அகவிலைப்படி உயர்வு நிலுவை, தற்போதைய 4 மாத அகவிலைப்படி நிலுவை வழங்க வேண்டும்.
ஓய்வு பெற்றோர் அகவிலைப்படி உயர்வு மற்றும் மருத்துவக் காப்பீடுத் திட்டம் நடைமுறைப்படுத்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதே நமது நிலைப்பாடு. ஆயினும், அரசு ஓய்வு பெற்றவர் அகவிலைப்படி உயர்வு சம்பந்தமாக நல்ல முடிவு எட்டப்பட வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம். அதே நேரத்தில், போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஒவ்வொன்றாக தீர்த்து வருகிறது நமது திமுக அரசு.
ஆகையால், இப்பிரச்சினைகளையும் தீர்க்கும் என்ற வாக்குறுதியை ஏற்றும், பொதுமக்கள் நலன்களைக் கருத்தில் கொண்டும், நமது தமிழ்நாடு முதலமைச்சரின் நல்லாட்சிக்கு களங்கம் விளைவிக்க முயலும் அதிமுக தொழிற்சங்க நடவடிக்கைகளை முறியடிக்க, வழக்கம் போல் பேருந்துகளை இயக்க வேண்டுமென தொமுச பேரவை சார்பில் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களை அன்போடு கேட்டுக் கொள்கிறது. மேலும், கோரிக்கைகளை தீர்க்க தொமுச பேரவை துணை நிற்கும்" என உறுதியளித்துள்ளார்.
இதையும் படிங்க: செமிகண்டக்டர் கொள்கையால் என்ன லாபம்? - என்ஜினியர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்குமா?