சென்னை, திருவான்மியூர் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மகள்கள் தனுஸ்ரீ (7), சாரு (5). நேற்று மதியம், திருப்பதியின் மனைவி சமையல் வேலை செய்து கொண்டிருந்தபோது, தனுஸ்ரீ, சாரு இருவரும் வீட்டில் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது, அந்த சிறுமிகள் வீட்டிலிருந்த ஒரு பெரிய மரப்பெட்டிக்குள் இறங்கி பெட்டியின் கதவை மூடி ஒளிந்து கொண்டனர். ஆனால், எதிர்பாராதவிதமாக பெட்டியின் தாழ்ப்பாள் மூடிக்கொண்டது. மீண்டும் பெட்டியின் கதவைத் திறந்துகொண்டு வெளியே வர முடியாமல் பெட்டிக்குள்ளே இருவரும் மயங்கிவிட்டனர்.
இதற்கிடையே, விளையாடிக் கொண்டிருந்த தன் மகள்கள் இருவரும் மாயமானதைக் கண்ட திருப்பதியின் மனைவி அதிர்ச்சி அடைந்தார். அக்கம்பக்கத்தில் தேடியும் இருவரையைும் காணவில்லை. பின்னர், வீட்டுக்கு திருப்பிய அவர், சந்தேகத்தின் பேரில் வீட்டிலிருந்தப் பெட்டியைத் திறந்து பார்த்தார். அதனுள் தனது மகள்கள் இருவரும் மயங்கிய நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து அலறினார்.
அவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், சிறுமிகள் இருவரையும் அருகில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர், சிறுமி தனுஸ்ரீ ஏற்கனவே மூச்சுத்திணறி இறந்துவிட்டதாக தெரிவித்தார். நல்வாய்ப்பாக உயிர்தப்பிய இளையமகள் சாருவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருவான்மியூர் காவல் துறையினர், சிறுமி தனுஸ்ரீயின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.