தி.மு.க வின் முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதியின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி சென்னை புரசைவாக்கத்தில் நடைபெற்றது. இதில் தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், சட்டமன்ற உறுப்பினர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய திருமாவளவன், "திராவிட முன்னேற்ற கழகம் சென்னையை பொறுத்தவரையில் தலித் மக்களின் பேராதரவை பெற்றது என்பதை யாரும் மறுத்தவிட முடியாது. முதல் மாவட்ட செயலாளராக பரிதி இளம்வழுதி அவர்களின் தந்தை இளம்பரிதி இருந்தார் என்பது பெருமைக்குரியது. தந்தையும் மகனும் திராவிட முன்னேற்ற கழகத்துக்கு விசுவாசமாக இருந்தவர்கள் என்பதை வரலாறு ஒருபோதும் மறைத்துவிடாது.
சீன அதிபரும், இந்திய பிரதமரும் தமிழ்நாட்டின் மாமல்லபுரம் கடற்கரையில் சந்திக்கின்றனர். தமிழ்மொழியால் சீன அதிபரை வரவேற்கிறேன் என்று பிரதமர் மோடி பேசுகிறார். கடற்கரையை சுத்தம் செய்கிறேன் என்று குப்பைகளை அள்ளுகிறார். இவையெல்லாம் உள்நோக்கம் கொண்டவை என்று நாம் கூறவில்லை என்றாலும், தமிழ்நாடு குறி வைக்கப்பட்டுள்ளது என்பதை நாம் யாரும் மறந்துவிட முடியாது.
தந்தை பெரியாருக்கு பிறகு அறிஞர் அண்ணாவுக்கு பிறகு தலைவர் கருணாநிதி ஆகியோரால் சமுகநீதி கோட்பாட்டை, இந்துத்துவ எதிர்ப்பை 50 ஆண்டுகாலம் தக்க வைத்ததில் திராவிட முன்னேற்ற கழகத்துக்கு பெரும்பங்கு உண்டு. ஆகவே ஆரிய, சனாதன எதிர்ப்பிலிருந்து விலகி தமிழ்த்தேசிய அரசியல் போய்க்கொண்டிருக்கிறதோ என்கிற அச்சத்தை நமக்கு ஏற்படுத்துகிறது.
சாதி எதிர்ப்பு, சாதி ஒழிப்பு, தமிழ் உணர்வு, தமிழ் பாதுகாப்பு, இந்தி எதிர்ப்பு, ஆரிய எதிர்ப்பு, சமஸ்கிருத எதிர்ப்பு போன்றவைதானே ஜனநாயகத்தை விரும்பக்கூடியவர்கள் முன்னெடுக்க வேண்டிய அரசியல். ஆகவே சனாதன எதிர்ப்பிலிருந்து விலகக்கூடிய தமிழ்த்தேசியம் இங்கே உருவாகிவிட கூடாது என்கிற கவலை மிஞ்சுகிறது.
அண்ணன் பரிதி இளம்வழுதி அவர்கள் சனாதன எதிர்ப்பு இயக்கத்தில் படை தளபதியாக இருந்தவர்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிக்க: பிரதமர் நரேந்திரமோடியை ட்வீட் செய்து கலாய்த்த பிரகாஷ் ராஜ்!