இது தொடர்பாக, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, "மாநிலங்களவையில் உள் துறை அமைச்சர் அமித் ஷா, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு இவ்வளவு காலம் வழங்கப்பட்டுவந்த சிறப்புத் தகுதியை நீக்கி மசோதா ஒன்றை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். இந்தியாவின் அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தம் இதுவரை நீடித்துவந்தது.
அரசியலமைப்பு சட்டம் 370ஆவது உறுப்பு மற்றும் 35ஏ ஆகிய இரண்டு உறுப்புகளும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு தனி அந்தஸ்து வழங்கியதோடு மட்டுமல்லாமல், அந்த மாநிலத்தவரை தவிர வேறு யாரும் அங்கு நிலம் வாங்க முடியாத நிலையில் இருந்தது.
இவற்றை எல்லாம் தகர்த்து அவற்றை இரண்டாக பிரித்து யூனியன் பிரதேசங்களாக அறிவித்திருக்கிறார்கள். இது மிகப்பெரிய ஜனநாயக படுகொலை. அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான ஒரு பயங்கரவாத நடவடிக்கை. இது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. இதனால் எத்தகைய எதிர் விளைவுகள் ஏற்படுமோ என்ற அச்சம் இப்போது நம்மை ஆக்கிரமித்து உள்ளது என்றார்.
மேலும், இந்த பிரச்னையில் காங்கிரஸ், திமுக, இடதுசாரிகளோடு இணைந்து இருப்போம். நாளை மக்களவையில் இதை அறிமுகப்படுத்தும் போது கடுமையாக எதிர்ப்போம். இந்திய மக்கள் இந்த ஜனநாயக விரோத நடவடிக்கையை ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் என்பதை உணர்த்த வேண்டிய தருணம். ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றிணைந்து போராட முன்வரவேண்டும். அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமான இந்த நடவடிக்கையை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது" என்று தெரிவித்தார்.