சென்னை: பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மற்றும் அகில இந்திய கியூபா ஒருமைப்பட்டுக்குழு இணைந்து நடத்தும் சோசலிச கியூபாவுக்கு பேராதரவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சேகுவேரா புதல்வி அலெய்டா குவேராவிற்கும், பேத்தி எஃடெஃபானி குவேராவிற்கும் மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதில் பேசிய திமுக துணை பொது செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, "தலைவர் கலைஞரிடம் நீங்கள் சந்திக்க விரும்பும் தலைவர் யாரென்று கேட்ட போது, அவர் ஒரு பட்டியல் சொன்னார். அவர் கூறிய தலைவர்கள் எல்லாம் உயிருடன் இல்லை என்று சொன்ன பிறகு, ஃபிடல் காஸ்ட்ரோ, சேகுவாரா இரண்டு தலைவர்களையும் நான் சந்திக்க விழைகிறேன்.
எத்தனை காலங்கள் கடந்தாலும் புரட்சி வெற்றி பெறும். இன்றைய இளைஞர்கள் கூட சட்டையில் சேகு வின் முகத்தை வைத்து நம்பிக்கையுடன் எதிர்கொள்கின்றனர். வெற்றியை ஜீரணிக்க முடியாத ஆதிக்க சக்திகள் தொடர்ந்து எதிராக தடைகளை விதித்து கொண்டிருக்கிறது.
நாம் எல்லோரும் கனவு காணும் அளவிற்கு கியூபாவில் மக்களுக்கான மருத்துவம் என்பது எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னால் செய்து முடித்து வழிகாட்டியாக உள்ளனர். நீட் கொண்டு வராமல் இருந்திருந்தால் நாம் எதை சாதிக்க துடிக்கிறோமோ, அதை கியூபா செய்து காட்டியுள்ளது. எந்த இடமாக இருந்தாலும் மருத்துவ வசதிகளை நிறுத்தக்கூடாது என்பது மனிதநேயம். நமக்கு இருக்க கூடிய ஒரே மொழி மனிதநேயம் மட்டும் தான். கியூபா மக்களோடு நாம் நிற்கிறோம் என்பதை உணர்த்துவதற்காக இந்த கூட்டம் நடத்தப்படுகிறது.
சாதாரணமாக தமிழ்நாடு மக்களை உரசி பார்த்தால் அமைதியாக இருப்பார்கள். சீண்டி பார்த்தால் அமைதியாக இருக்க மாட்டார்கள் என்ற நிலையை உருவாக்கி காட்டியுள்ளோம். கிணற்றை காணவில்லை என்ற கதையை போல், ஆளுநர் கதையை மாற்றி பேசியிருக்கிறார். மனிதநேயத்திற்கு என்றும் துணை நிற்போம்” என்றார்.
இதனைத் தொடர்ந்து விசிக தலைவர் திருமாவளவன் பேசுகையில், “சேகுவேரா இன்று இருந்தால் வேங்கை வயலில் மனிதக் கழிவு கலக்கப்பட்டதை எதிர்த்துக் குரல் கொடுத்து இருப்பார். சனாதனத்தை எதிர்த்துக் குரல் கொடுத்திருப்பார். ஈழ விடுதலையை ஆதரித்துக் குரல் கொடுத்திருப்பார். சேகுவேரா இன்று இருந்திருந்தால் சங்பரிவார், ஆர்எஸ்எஸ்ஸை எதிர்த்து குரல் கொடுத்திருப்பார்” என்றார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் எனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு பிரமிப்பை அளிக்கிறது - சேகுவேராவின் மகள்