சென்னை: கலைவாணர் அரங்கில் இன்று (செப்.26) முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “கடந்த ஆண்டு நாம் ஆட்சிக்கு வந்தபோது பெருமழையைச் சந்தித்தோம். சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு நமக்கெல்லாம் பெரும் சவாலாகவே இருந்தது.
மீண்டும் அதுபோன்ற ஒரு நிலை சென்னைக்கு ஏற்பட்டுவிடக் கூடாது என்று நாம் அப்பொழுதே முடிவெடுத்தோம். அதற்குரிய நடவடிக்கைகளில் ஈடுபட்டோம். இதற்கான வழிமுறைகளை அரசுக்கு எடுத்துரைக்க திருப்புகழ் தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டு, அந்தக் குழு அளித்த ஆலோசனைப்படி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது உங்களுக்கெல்லாம் நன்றாக தெரியும்.
சென்னை மட்டுமின்றி அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்கள் மற்றும் தமிழ்நாட்டின் வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்படக்கூடிய மாவட்டங்களில் எல்லாம் மேற்கொள்ளப்படவேண்டிய வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் கண்டறியப்பட்டு, தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருகிறது. அவ்வாறு துவக்கப்பட்ட பணிகள் அனைத்தையும் மிக விரைவில் முடிவுக்கு கொண்டு வரவேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
சென்னையிலே கடந்த ஆண்டு அதிக அளவிலே வெள்ளப் பாதிப்புக்குள்ளான பகுதிகள், வெள்ள அபாயம் உள்ள பகுதிகளை கண்காணித்து உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது மிகமிக அவசியமானது. இதுமட்டுமின்றி சென்னையின் முதன்மையான நீராதாரங்களாக இருக்கக்கூடிய செம்பரம்பாக்கம், புழல் உள்ளிட்ட ஏரிகளில் ஏற்கனவே போதிய அளவில் நீர் இருப்பு உள்ளதாக நான் அறிகிறேன்.
நிவாரண மையங்களில் பொதுமக்களைத் தங்க வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்போது, அவர்களுக்குத் தரமான உணவு, குடிநீர், மின்சாரம், மருத்துவம் மற்றும் சுகாதார வசதிகள் நீங்கள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இதில் குறைகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது உங்கள் கடமை. ஒவ்வொரு நிவாரண முகாமிற்கும் ஒவ்வொரு பொறுப்பு அலுவலர் நியமிக்கப்பட வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு வகையிலும் நாம் கவனமெடுத்து செயல்பட்டால், கடும் மழையினால் பாதிக்கப்படக்கூடிய ஏழை, எளிய மக்கள், உழவர்கள், மீனவர்கள் போன்றவர்கள் அவர்களுக்கு ஏற்படக்கூடிய துயரை நாம் ஓரளவுக்கு குறைக்க முடியும். அதுதான் இந்த அரசினுடைய நோக்கம்.
உங்களுக்கு ஏற்படக்கூடிய எண்ணங்களை, உடனுக்குடன் அரசுக்கு நீங்கள் தெரிவித்து அந்தப் பணிகளை வேகப்படுத்த வேண்டும். இதுபோன்ற ஆலோசனைக் கூட்டங்களில் மட்டும்தான் ஆலோசனை சொல்ல வேண்டும் என்பது இல்லை. உடனுக்குடன் நீங்கள் சொல்ல வேண்டும். பொதுத் தொலைபேசி எண்களைப் பரப்ப வேண்டும்,
இதையும் படிங்க: அதிமுக தலைமை அலுவலக கலவர வழக்கில் திருடப்பட்ட ஆவணங்கள் மீட்பு