சென்னை: தமிழ்நாடு பார் கவுன்சில் சார்பில் வழக்கறிஞர்கள், கிளார்க்குகள், நீதிமன்ற பணியாளர்கள், அவர்களின் குடும்பத்தினர்களுக்கான கரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாமை, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தொடங்கிவைத்தார்.
இதில் நீதிபதிகள் என். கிருபாகரன், எம்.எம். சுந்தரேஷ், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.
விழாவைத் தொடங்கிவைத்த பின் மா. சுப்பிரமணியன் பேசுகையில்,
“தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நீதிமன்ற வளாகங்களிலும் தொடர் முகாம்கள் நடத்தி அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் ஏற்பாடு செய்யப்பட்டுவருகிறது. தேயிலைத் தோட்டப் பணியாளர்களுக்கும் பழங்குடியினருக்கும் நேரடியாகச் சென்று தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
10 நாள்களில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தேயிலைப் பணியாளர்களுக்கும் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் பணி நிறைவடையும். தமிழ்நாட்டில் அதிகம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்ட சட்டப்பேரவைத் தொகுதியாக சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி உள்ளது. 90 ஆயிரம் பேர் அங்கு தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.
இன்று (ஜூன் 28) காலை நிலவரப்படி தமிழ்நாட்டில் சுமார் இரண்டு லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் இருந்தன. தடுப்பூசி இல்லை என காலை முதல் செய்திகள் வந்துகொண்டிருந்தன. தடுப்பூசி இல்லை என்பது வருத்தமான ஒன்றுதான். இன்று (ஜூன் 28) நண்பகல் 12 மணிக்குள் அனைத்துத் தடுப்பூசிகளும் தீர்ந்துவிடும்” என்று தெரிவித்தார்.
தடுப்பூசி தட்டுப்பாடு
முன்னதாக கரோனா தடுப்பூசி இல்லாத காரணத்தினால் சென்னையில் இன்று (ஜூன் 28) கரோனா தடுப்பூசி முகாம் ரத்து என மாநகராட்சி இணையதளத்தில் அறிவித்திருந்தது.
மேலும் மீண்டும் எப்பொழுது தடுப்பூசி வருகிறது எனத் தெரிந்த பிறகே தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று மாநகராட்சி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இலங்கை அகதி பெண்ணிடம் பாலியல் வன்புணர்வு: இருவர் கைது