தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ப. சிதம்பரம் வழக்கில் எஃப்ஐஆரில் பெயர் இல்லாத ஒருவரை சிபிஐ கைது செய்துள்ளதாகவும், அமலாக்கத்துறை கைது செய்யாமல் இருக்க ஜாமின் வழங்கப்பட்டுள்ள நிலையில் நீதிமன்றத்தில் நீதி கிடைக்கும் என்று தெரிவித்தார்.
சிதம்பரத்தை கைது செய்து சிறையில் அடைத்து அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படும் மத்திய அரசு இதன் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு இழுக்கை ஏற்படுத்த வேண்டும் என முயற்சிக்கிறது என்றார்.
இந்த விவகாரத்தில் அரசு முற்றிலும் தவறான நிலையை எடுத்துள்ளதாக கூறிய அவர், இது தர்மத்திற்கும் நீதிக்கும் புறம்பானது என்று தெரிவித்தார். அடக்குமுறையை ஏவி விட வேண்டும் என்று மோடி அரசு விரும்புவதாக குறிப்பிட்ட அவர், சர்வாதிகாரிகள் அப்படி தான் நடந்து கொண்டுள்ளனர் என்று சாடினார்.
சிதம்பரம் விவகாரத்தில் திமுக மௌனம் காக்கவில்லை என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் அழகான முறையில் இது பற்றி கருத்து தெரிவித்திருப்பதாகவும் கூறினார். காங்கிரஸ் தொண்டன் பேசுவது போல் திமுகவும் பேசமுடியுமா என்று கூறிய அவர், திமுக-காங்கிரஸ் இடையே நல்ல புரிதல் உள்ளதாகவும், இந்த நட்பு நேர்மையானது, இதில் சந்தேகங்களுக்கு இடமே இல்லை என்றும் தெரிவித்தார்.
சிதம்பரம் கைதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டங்களில் காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டதாகவும், கட்சியில் தற்போது ஒற்றுமை மற்றும் எழுச்சி எழுந்துள்ளதாகவும் கூறினார்.
தமிழ்நாட்டிற்கு யார் அவமானம், தலைக்குணிவு என்று உலகத்திற்கே தெரியும் என்று சாடிய அழகிரி, அதிமுக அமைச்சர்கள் போல் பொது வாழ்க்கையில் தாழ்மையடைந்தவர்கள் வேறு யாரும் கிடையாது என்றும் கடுமையாக விமர்சித்தார். சிபிஐ விசாரணைக்கும் வழக்கிற்கும் உட்பட்டு ஆட்சி, அதிகாரத்தில் இருக்கும் அதிமுகவினர் மற்றவர்களை குறை சொல்வது தவறானது என்றார்.
தொடர்ந்து கோவையில் பயங்கரவாதிகள் ஊடுருவிய விவகாரம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அழகிரி, தமிழ்நாடு காவல்துறையினர் திறமையானவர்கள் என்பதால் பயங்கரவாதிகள் நுழைந்தால் அதை கட்டுப்படுத்துவார்கள் என்று கூறினார்.