சென்னை ராயப்பேட்டையில் உள்ள சிஎஸ்ஐ மோனகன் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் விடுதியில் தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் சிறுபான்மை ஆணைய உறுப்பினர்களுடன் நேரில் ஆய்வு மேற்கொண்டு விடுதி மாணவர்கள், பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பீட்டர் அல்போன்ஸ், “சென்னை ராயப்பேட்டை சிஎஸ்ஐ மோனகன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களும், விடுதியில் 56 மாணவர்களும் தங்கிப் பயின்று வருகின்றனர்.
இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களில் 40 விழுக்காடு இந்துக்கள், 40 விழுக்காடு இஸ்லாமியர்கள், 20 விழுக்காடு கிறிஸ்தவர்கள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் முன்னறிவிப்பின்றி திடீரென ஆய்வு செய்த தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர்கள் பல புகார்களை தெரிவித்துள்ளனர்.
பள்ளி நிர்வாகத்தினர் சமூக நலத்துறை அமைச்சரின் கவனத்திற்கு இப்பிரச்னையைக்கொண்டு வந்ததால், கிருத்திகா ஐஏஎஸ் நேரில் ஆய்வு செய்தார். விடுதிகளில் சில அடிப்படை பணிகளை செய்ய அறிவுறுத்தினார்.
இதனிடையே ஆணையத்தின் உறுப்பினர்கள் மீண்டும் ஆளுநரை சந்தித்துப் புகார் தெரிவித்து, கட்டாய மதமாற்றம் செய்யப்படுவதாகவும் பிரச்னைகளை கிளப்பி உள்ளனர். குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர்கள் ஏதோ உள்நோக்கத்துடன் செயல்படுவதாகத் தெரிகிறது. தமிழ்நாட்டில் ஏராளமான கிறிஸ்தவ பள்ளிகள் உள்ளன. கட்டாய மதமாற்றம் நடந்திருந்தால் 50 விழுக்காடு பேர் கிறிஸ்தவர்களாக இருந்திருப்பார்கள்.
கட்டாய மதமாற்றம் என்ற புரளியைக்கிளப்பி தமிழ்நாட்டை சவக்கிடங்காக மாற்றும் முயற்சியில் சிலர் ஈடுபடுவதாக சந்தேகம் எழுகிறது. தமிழ்நாட்டின் தரமான கல்விச்சேவையை முடக்க முயற்சி என்றும் இவையெல்லாம் உள்நோக்கத்துடன் செய்யப்படும் சதி. தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர்களை யாரோ இயக்குகிறார்கள் எனப் புகார் தெரிவித்தார்.
குழந்தைகள் உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர்கள் மேற்கொண்ட ஆய்வில் எந்த விதிகளையும் பின்பற்றவில்லை. குறிப்பிட்ட உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக விரிவான அறிக்கை தயாரித்து முதலமைச்சரிடம் வழங்க உள்ளோம். கட்டாய மதமாற்றம் என யாரும் புகார் அளிக்காத நிலையில், மதமாற்றம் நடைபெறுகிறது எனப் புரளியை பரப்ப வேண்டிய அவசியம் என்ன?.
மாநில கல்வி வளர்ச்சியை சீர்கெடுக்க சிலர் முயல்கின்றனர். கட்டாய மதமாற்றம் என ஓரிரு பள்ளியில் புரளியைக் கிளப்பி மாநிலம் முழுவதும் பரவ வைக்க சதித்திட்டம் நடைபெறுகிறது. கட்டாய மதமாற்றம் என பள்ளி மாணவர்கள் அல்லது பெற்றோர்கள் யாரேனும் புகார் அளித்துள்ளனரா?
கட்டாய மதமாற்றத்தை தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம் எப்போதும் ஏற்காது. தமிழ்நாட்டில் உள்ள கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களை எதிரிகளாக கட்டமைப்பதற்கான சதி நடைபெறுகிறது. மேலும் பள்ளியில் உள்ள விடுதி முறையாக பதிவு செய்யப்படவில்லை. அதற்கான பணிகள் நடைபெறுகிறது. கள்ளக்குறிச்சி சம்பவத்திற்குப் பின்னர் தான் விடுதிகளை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள பள்ளி விடுதிகளில் பதிவு செய்யப்பட்டவைகளின் விவரம் குறித்து தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திடம் இருக்கிறதா?. மேலும் தமிழ்நாட்டில் உள்ள சிறுபான்மை மற்றும் அரசு உதவிபெறும் பள்ளியில் உள்ள குறைகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சரிடம் தெரிவித்துள்ளோம். குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தேனியில் சமூக ஆர்வல சகோதரிகளை கைது செய்யக்கோரி பாஜகவினர் போராட்டம்