சென்னை: சென்ட்ரல் ரயில் நிலைய நடைமேடையில் வசித்துவருபவர் டம்மு பிரியா (19). இவர் கடந்த 14ஆம் தேதி இரவு கண்ணப்பர் திடல், கண்மணி பெட்ரோல் பங்க் அருகே நின்றுகொண்டிருந்தார்.
அப்போது அங்கு ஐந்து பேருடன் வந்த கீதன் (23) என்பவர் டம்மு பிரியாவை மடக்கி தனது மனைவி பிரியங்கா எங்கே எனக் கேட்டு கத்தியைக் காட்டி மிரட்டினார். மேலும் தனது மனைவியைத் தவறான பாதைக்கு அழைத்துச் சென்றது யார்? எனக் கேட்டு மிரட்டி கத்தியால் அவரை வெட்டிவிட்டுத் தப்பிச் சென்றார்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற பெரியமேடு காவல் துறையினர் காயமடைந்த டம்மு பிரியாவை மீட்டு ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பின்னர் வழக்குப்பதிவு செய்த காவலர்கள் டம்மு பிரியாவைத் தாக்கிவிட்டு தப்பியோடிய கும்பலை தேடிப் பிடித்து கைதுசெய்தனர். விசாரணையில் அவர்கள், திருவல்லிக்கேணியைச் சேர்ந்த கீதன், சென்ட்ரல் பகுதியைச் சேர்ந்த செல்வா (21), கார்த்திக், லட்சுமணன் ஆகியோர் என்பது தெரியவந்தது.
மேலும் ரவுடியான கீதனின் மனைவி பிரியங்கா தவறான தொழிலில் ஈடுபட்டுவந்ததும், அதற்கு டம்மு பிரியாதான் காரணம் எனத் தெரியவந்ததால் அவரை கொலைசெய்ய முயன்றதாக கீதன் தெரிவித்தார். தலைமறைவாக உள்ள ராமு, அலமேலு ஆகியோரை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: அக்கா மகளை பெண் கேட்டு தொந்தரவு செய்த தம்பி - அடித்துக் கொன்ற அக்கா