சென்னை: திருவேற்காடு ஸ்ரீதேவி நகர் 4ஆவது தெருவைச் சேர்ந்தவர் ராஜிலா(45). இவர் தனது கணவர் ராஜேஷை விட்டுப் பிரிந்து தனது மகன், ஒரு மகளுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் ராஜிலா குடும்பப் பிரச்சனை காரணமாக அயப்பாக்கம்- திருவேற்காடு சாலையில் நள்ளிரவில் திடீரென சாலையில் படுத்துக்கொண்டு பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
இது குறித்து அவ்வழியே சென்ற பொதுமக்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அம்பத்தூர் காவல் உதவி ஆய்வாளர் புவனேஸ்வரி சாலையில் படுத்துக்கொண்டு ரகளையில் ஈடுபட்டு வந்த பெண்ணை அப்புறப்படுத்த முயன்றுள்ளார்.
அப்பொழுது அப்பெண் காவல் உதவி ஆய்வாளரிடம் தகாத வார்த்தைகளால் திட்டி வாக்குவாதம் செய்துள்ளார். மேலும் உதவி ஆய்வாளரைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் காயமடைந்த பெண் உதவி ஆய்வாளர் முதலுதவி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் இது குறித்து உதவி ஆய்வாளர் புவனேஸ்வரி உயர் அதிகாரிகளுக்குத் தகவல் கூறியதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் அதிகாரிகள் தாக்குதலில் ஈடுபட்ட ராஜிலாவை பிடித்து புதியதாக துவக்கப்பட்ட அயப்பாக்கம் புறக்காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர். பின்னர், காவலர்களைப் பணி செய்ய விடாமல் தடுத்தது, அவதூறாகப் பேசியது, தாக்கியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து ராஜிலாவை கைது செய்தனர்.
இதையும் படிங்க: மீரா மிதுனின் கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்