சென்னை மாநகரில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் கடற்கரை சாலைகளில் சிறுவர்கள், இளைஞர்கள் ஆகியோர் அதிவேக இருசக்கர வாகனங்கள் மூலம் "வீலிங்" எனப்படும் சாகசத்தில் ஈடுபடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இதனால் பல விபத்துகள் ஏற்பட்டதையடுத்து, இதுபோன்ற சாகசங்களில் ஈடுபடுவோரை கைது செய்து அவர்களின் வாகனங்களையும் பறிமுதல் செய்ய சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டார்.
இதனடிப்படையில் வாரத்தின் இறுதி நாட்களில் சட்டம் ஒழுங்கு காவல்துறையினரும், போக்குவரத்து காவல்துறையினரும் இணைந்து அதிரடியாக இரவில் வாகன சோதனை நடத்தி "வீலிங்" செய்பவர்களை கைது செய்வதோடு, அவர்களின் இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்து வருகின்றனர்.
அதேநேரம் இளஞ்சிறார்கள் மற்றும் இளைஞர்கள் தங்கள் மனநிலையை மாற்றிக்கொள்ள வித்தியாசமான தண்டனையும் அவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பைக் வீலிங்கில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்களை ஸ்டான்லி மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் 2 வாரங்கள் பணியாற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதேபோல் இந்தாண்டு போகி பண்டிகையின்போது, கடற்கரை சாலையில் "வீலிங்" செய்த 17 வயது இளஞ்சிறாருக்கு வித்தியாசமான தண்டனை ஒன்றை கீழ்பாக்கம் சிறுவர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் லட்சுமி கடந்த வாரம் வழங்கியுள்ளார். இந்த உத்தரவில், “வீலிங் செய்த இளஞ்சிறார் வாரத்தில் சனிக்கிழமைதோறும் மாலை நேரங்களில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து காவல்துறையினருடன் இணைந்து உழைப்பாளர் சிலை அருகேயுள்ள சிக்னலில் வாகனங்களை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட வேண்டும்.
சிக்னல் எல்லைக் கோட்டை தாண்டி நிற்கும் வாகன ஓட்டிகள் மற்றும் தலைக்கவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளிடம் போக்குவரத்து விதிகள் குறித்து இளஞ்சிறார் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதுமட்டுமல்லாமல் தொடர்ந்து ஐந்து வாரங்களில் 10 மணி நேரம் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் இளஞ்சிறார் ஈடுபட வேண்டும். இதன் மூலம் வாழ்க்கையின் முக்கியத்துவத்தை சிறுவர் உணர வேண்டும். இளஞ்சிறாருடன் காவல் உதவி ஆய்வாளர் பொறுப்பில் உள்ள போக்குவரத்து அலுவலரை பணியமர்த்த வேண்டும்” என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் சென்னை காமராஜர் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே அண்ணா சதுக்கம் போக்குவரத்து உதவி ஆய்வாளர் ரமேஷ், 17 வயது இளஞ்சிறாருடன் சேர்ந்து போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது பொதுமக்களிடையே போக்குவரத்து விழிப்புணர்விலும் இளஞ்சிறார் ஈடுபட்டார்.
இதையும் படிங்க: போக்குவரத்து விழிப்புணர்வு பிரசுரங்களை விநியோகித்த பிரபல பைக் ரேஸர்