சென்னை: தமிழ்நாட்டில் திரையரங்குகளில் மூன்று விதமாக கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வருகிறது. மல்டி பிளக்ஸ், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் உள்ள திரையரங்குகள் மற்றும் ஐமேக்ஸ் திரையரங்குகள் என வகைப்படுத்தப்பட்டு அதற்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டது. தற்போது மல்டி பிளக்ஸ் திரையரங்குகளில் டிக்கெட் ஜிஎஸ்டி உள்பட 190 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. கடந்த 6 ஆண்டுகளாக இந்த டிக்கெட் கட்டணமே நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் திரையரங்குகளில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த அனுமதி வேண்டும் என தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
மல்டி பிளக்ஸ் திரையரங்குகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம், ஸ்ரீதர் ஆகியோர் இந்த மனுவை அளித்துள்ளனர். அதன்படி மல்டி பிளக்ஸ் ஏசி தியேட்டரில் 150 ரூபாய் டிக்கெட்டை 250 ரூபாய் ஆக உயர்த்த வேண்டும் என்றும் மல்டி பிளக்ஸ் ஏசி இல்லாத தியேட்டரில் குறைந்தபட்ச கட்டணத்தை 150 ரூபாய் ஆக உயர்த்த வேண்டும் என்றும், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் ஏசி இல்லாத தியேட்டர்களில் கட்டணத்தை 80 ரூபாயில் இருந்து 120 ரூபாய் ஆக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: பொங்கல் விருந்தாக வரும் இரண்டு பான் இந்தியா படங்கள்... அட கமல்ஹாசன் படமும் ரிலீஸ் ஆகுதுபா?
மேலும், திரையரங்குகளில் கட்டண உயர்வைத் தொடர்ந்து, திரையரங்குகளின் காட்சி நேரத்தையும் அதிகரிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் லைசன்ஸ் உள்ளிட்ட கோரிக்கைகளும் இந்த மனுவில் இடம் பெற்றுள்ளன. இது மட்டுமின்றி, பெரிய திரையரங்குகளை சிறு திரையரங்குகளாக மாற்ற பொது பணித்துறையிடம் உரிமம் பெற்றால் போதும் என்ற நிலை உருவாக வேண்டும்.
ஆண்டுக்கு ஒருமுறை புதுபிக்கப்படும் C படிவ உரிமையை மூன்று ஆண்டுகளாக மாற்ற வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை தமிழ்நாடு உள்துறை செயலாளரிடம் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து மனி அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து நடைமுறை செலவுகள் அதிகரித்து வருவதால் திரையரங்குகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், டிக்கெட் விலையை உயர்த்த அனுமதி தருமாறு கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
மல்டி பிளக்ஸ் திரையரங்குகளில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தினால் ஜிஎஸ்டி கட்டணத்துடன் சேர்த்து 330 ரூபாய் வரும் என்று தெரிகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு திரையரங்கின் கட்டணங்கள் உயர்த்தப்பட்ட நிலையில், காரணங்களை நிறைத்து மீண்டும் விலை உயர்த்துவது சினிமா விமர்சகர்கள் மற்றும் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க: திமுகவினர் இழைத்த அநீதியை மாரி செல்வராஜ் 'மாமன்னன்' மூலம் வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளார் - அர்ஜூன் சம்பத்