சென்னை: ராயப்பேட்டை பெரியார் திடல் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் ராஜி(45). இவருக்கு திருமணமாகி கலா என்ற மனைவியும், இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். ஆட்டோக்களுக்கு ரீப்பர் அடிக்கும் வேலை பார்த்து வந்த ராஜி, மதுபோதைக்கு அடிமையாகி தினமும் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதனால் மது பழக்கத்திற்கு அடிமையான ராஜியை அவரது மனைவி கலா கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ராயப்பேட்டை வெஸ்கோஷ் சாலையிலுள்ள சென்னை கேர் சென்டர் என்ற போதை மறுவாழ்வு மையத்திற்கு சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். அங்கு சில நாட்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய ராஜி மீண்டும் மது பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். இதையடுத்து மீண்டும் ராஜி குடித்துவிட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனால் மனைவி கலா நேற்று(மே 2) மீண்டும் ராயப்பேட்டை போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு போதை மறுவாழ்வு மையத்தின் உரிமையாளர் கார்த்தி, கலாவை தொடர்பு கொண்டு கணவர் ராஜி கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
மரணத்தில் மர்மம்: இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கலா, உடனே ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குச் சென்று பார்த்த போது கணவர் ராஜி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, கலா தனது கணவரின் உடலைப் பார்த்த போது முகம், உடலில் பலத்த காயங்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சிடைந்துள்ளார்.
தனது கணவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறிய கலா, அண்ணாசாலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் அண்ணாசாலை காவல்துறையினர் வழக்குபதிவு செய்து போதை மறுவாழ்வு மைய மேலாளர் மோகன், ஊழியர் ஜெகன், பார்த்தசாரதி ஆகியோரைப் பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போதை மறுவாழ்வு மையத்தின் உரிமையாளர் கார்த்திக்கை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். திருவல்லிக்கேணி துணை ஆணையர் பகலவன் மறுவாழ்வு மையத்தை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார்.
அடித்தே கொன்றுவிட்டார்கள்..!: தனது தந்தையை போதை மறுவாழ்வு மையத்தில் அடித்துக் கொன்றுவிட்டதாக அவரது மகன் மணிகண்டன் வேதனையுடன் தெரிவித்தார். நேற்று போதை மறுவாழ்வு மையத்தில் ரூ.40 ஆயிரம் செலுத்திவிட்டு தனது தந்தையை நல்ல முறையில் சிகிச்சைக்காக சேர்த்ததாகவும், சிறிது நேரத்தில் தனது தந்தை கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டு சீரியஸாக இருப்பதாக தெரிவித்ததாகவும், உடனே சென்று பார்த்த போது தனது தந்தையின் முகம், உடல் முழுவதும் அடித்த காயம் இருந்ததாகவும், யார் அடித்தது எனக் கேட்டதற்கு ஒருவரும் பதிலளிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
ஒரு காயமில்லாமல் சென்ற தனது தந்தையை அடையாளம் தெரியாத அளவுக்கு அடித்து கொன்றுவிட்டார்கள் எனக் குற்றம்சாட்டினார். மேலும், அந்த மையத்தில் அனைவரையும் அடித்து பயமுறுத்தி வைத்திருப்பதாக அவர் தெரிவித்தார். தனது கணவர் திருந்த வேண்டும் என்று அனுப்பி வைத்ததாகவும், ஆனால் அவர்கள் அடித்து கொலை செய்துவிட்டதாக அவரது மனைவி கலா தெரிவித்தார்.
போதை மறுவாழ்வு மையம் நடத்த மாநில மனநல மருத்துவ ஆணையத்திடம் உரிமம் பெறவேண்டும். தமிழ்நாட்டில் மட்டும் 400 போதை மறுவாழ்வு மையங்கள் உள்ளன. சமூக நல ஆணையம் மற்றும் மாநகராட்சியின் கீழ் போதை மறுவாழ்வு மையம் இயங்காது.
இந்நிலையில் போதை மறுவாழ்வு மையம் அனுமதி பெறாமல் இயங்கி வந்துள்ளது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: தாயுடன் தகாத உறவில் இருந்த நபரின் பிறப்புறுப்பை அறுத்த மகள்!