சென்னை அருகே வியாசர்பாடி ஈ.எச் சாலையில் 57 எண் கொண்ட மாநகரப்பேருந்தில் சில கல்லூரி மாணவர்கள் கோஷம் போட்டுக்கொண்டு பட்டாக்கத்தியை தரையில் தேய்த்தபடி பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பயணம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
இந்த வீடியோ தொடர்பாக எம்.கே.பி நகர் போலீசார் கலகம் செய்யத் தூண்டுதல், பொதுமக்களை அச்சுறுத்துதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் கடந்த மாதம் அம்பேத்கர் கல்லூரி மாணவர்கள் பேருந்தில் மேற்கூரையில் தொங்கியபடியும், கத்தியை தேய்த்துக் கொண்டும் சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து கத்தியை தேய்த்தபடி சென்ற திருவள்ளூர் மாவட்டத்தைச்சேர்ந்த இரு கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அம்பேத்கர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயிலும் தீபன் (18) மற்றும் சாரதி (19) ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரு மாணவர்களையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, கல்லூரிகளில் தேர்வுகள் நடைபெறுவதால் மாணவர்களை எச்சரித்து மேஜிஸ்ட்ரேட் பிணையில் விடுதலை செய்தனர். மேலும் சம்பவத்தில் ஈடுபட்ட அனைத்து மாணவர்களையும் உடனடியாக கைது செய்யும் படியும், அவர்களுக்கு நூதன தண்டனை வழங்க இருப்பதாகவும் மேஜிஸ்ட்ரேட் தெரிவித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:குட்டியை தேடி ஊருக்குள் வந்ததா..? மூன்று பேரை கடித்து குதறிய கரடி மர்ம முறையில் உயிரிழந்தது..