சென்னை: மிக்ஜாம் புயல் மழையால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் ஆங்காங்கே வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னை கொருக்குப்பேட்டை எழில் நகர் பகுதியில் கடந்த 9ஆம் தேதி அதிமுக சார்பில் நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது, நிவாரண உதவிகளை பெற மக்கள் குவிந்தனர். இதல் கூட்ட நெரிசல் ஏற்பட்ட நிலையில், 14 வயதுடைய சிறுமி மயக்கம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஆர்.கே.நகர் போலீசார் 174 என்கிற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஆர்.டி.ஓ விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், ஆர்.கே.நகர் போலீசார் சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு மேற்கொண்ட போது அதில் சிறுமி மூச்சுத்திணறியோ கூட்ட நெரிசலில் யாராவது நெரித்தோ உயிரிழக்கவில்லை என விளக்கம் அளித்துள்ளனர். அதேபோல் சிறுமி கூட்ட நெரிசலில் நிற்காமல் தனியாக நிற்பது போல் சிசிடிவி காட்சிகளில் பதிவாகி இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக சிறுமியின் பெற்றோர்கள் கூட்ட நெரிசலில் சிக்கியதால் அவரின் பற்கள் உடைக்கப்பட்டு இருந்ததாக குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டிருந்த நிலையில், சிறுமி மயங்கி கீழே விழுந்த போது பற்கள் உடைந்ததாக காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.
மேலும், பிரேத பரிசோதனை ஆய்வு அறிக்கைகளும் சிறுமி கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழக்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. ஆனாலும் முழுமையான பரிசோதனைக்கு பிறகு சிறுமியின் உயிரிழப்புகான காரணம் முழுமையாக தெரியவரும் என மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வட சென்னை ஆர்.டி.ஓ இப்ராஹிம் நாளை மறுநாள் (டிச.13) புதன்கிழமை சம்பவ இடத்திற்கு சென்று, இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மருத்துவர்கள் மற்றும் போலீசாரின் வேண்டுகோளுக்கு இணங்க சிறுமியின் உடலை பெற்று அவரது உறவினர்கள் அடக்கம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: "ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செல்லும்" - உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து அரசியல் தலைவர்கள் கருத்து..!