சென்னை: தமிழ்நாட்டில் மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகள், பட்டயப்படிப்புகள், சான்றிதழ் படிப்புகளில் 2022-2023ஆம் கல்வி ஆண்டில் பி.பார்ம். (லேட்டரல் என்டிரி) படிப்பு, போஸ்ட் பேசிக் பி.எஸ்சி. நர்சிங் படிப்பு , போஸ்ட் பேசிக் டிப்ளமோ இன் சைக்கியாட்ரி நர்சிங் படிப்பு, பெண்களுக்கான செவிலியர் பட்டயப்படிப்பு, மருத்துவம் சார்ந்த பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்பு ஆகியவற்றில் சேர்வதற்கு ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரையில் ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளில் தமிழ்நாட்டில் 19 பட்டப்படிப்புகள் 19 அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர 2,536 இடங்கள் இருக்கின்றன. தனியார் சுயநிதி மருத்துவக்கல்லூரிகளில் 4 விதமான பட்டப்படிப்புகளில் 22,200 இடங்கள் இருக்கின்றன. அவற்றில் 14 ஆயிரத்து 157 இடங்கள் மாநில ஒதுக்கீட்டில் நிரப்பப்பட உள்ளன. டிப்ளமோ நர்சிங் படிப்பானது 25 அரசு கல்லூரிகளில் 2,060 இடங்கள் உள்ளன. சான்றிதழ் படிப்புகளில் 27 கல்லூரிகளில் 8,596 இடங்கள் உள்ளன.
மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளில் சேர்வதற்கு 58,980 பேரும், டிப்ளமோ நர்சிங் படிப்பிற்கு 12,624 பேரும், டிப்ளமோ சான்றிதழ் படிப்பிற்கு 7,793 பேரும், டிப்ளமோ கண்சிகிச்சை படிப்பிற்கு 1,055 பேரும், டிப்ளமோ பார்மசி படிப்பிற்கு 5,271 பேரும் , போஸ்ட் பேசிக் நர்சிங் படிப்பிற்கு 670 பேரும், போஸ்ட் பி.பார்ம் படிப்பிற்கு 365 பேரும், மருத்துவம் சார்ந்து பணி படிப்பிற்கு 1,006 பேரும் என 87,764 பேர் விண்ணப்பம் செய்திருக்கின்றனர்.
அவர்களில் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் விண்ணப்பித்திருந்த 304 பேருக்கு மருத்துவப்பரிசோதனை 23ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரையில் நடைபெற்று முடிந்துள்ளது. மேலும் மற்றவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணிகளும் ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது.
இதனைத்தொடர்ந்து தகுதியானவர்களுக்கு தரவரிசைப் பட்டியல் அடுத்த வாரம் வெளியிடப்படும் எனவும், கலந்தாய்வு ஆன்லைன் மூலம் செப்டம்பர் மாதம் நடத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க:செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாகிறது நீட் தேர்வு முடிவுகள்