சென்னை: பேசின் பிரிட்ஜ் காவல் நிலையத்தில் பெண் காவலராக பணிபுரிந்து வருபவர் சுசீலா (30). இவர் நேற்று முன்தினம் காலை 10 மணி அளவில் பணி சம்பந்தமாக பேசின் பிரிட்ஜ் பகுதியிலிருந்து பேருந்தில் பேசின் பிரிட்ஜ் காவல் நிலையம் வந்து கொண்டிருந்தார்.
பேருந்து காவல் நிலையம் அருகே வந்தபோது திடீரென்று பேருந்தில் இருந்த பயணிகள் கூச்சலிட்டனர். அப்போது இரண்டு நபர்கள் செல்போனை திருடிக் கொண்டு ஓட முயற்சி செய்தனர். அப்போது சுசிலா அதில் ஒருவரை மடக்கிப் பிடித்து பேசன் பிரிட்ஜ் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தார்.
விசாரணையில் பிடிபட்ட நபர் புளியந்தோப்பு திருவிக நகர் பகுதியைச் சேர்ந்த ஜாபர் ஷெரிப் (36) என்பதும், இவரிடம் திருடப்பட்ட ஒரு செல்போன் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து பேசன் பிரிட்ஜ் குற்றப்பிரிவு போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
கர்ப்பிணியாக உள்ள சுசிலா திறம்பட செயல்பட்டு பேருந்தில் செல்போன் திருடனை மடக்கிப்பிடித்த செய்தி அறிந்து வடபழனி சூர்யா மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் ராஜு சிங் குமார் மற்றும் ஸ்ரீ குமார் உள்ளிட்டோர் நேற்று புளியந்தோப்பு துணை கமிஷனர் ஈஸ்வரன் முன்னிலையில் சுசிலாவிற்கு ஒரு லட்சத்திற்கான காசோலையினை வழங்கினர்.
மேலும் துணிச்சலாக செயல்பட்ட பெண் காவலர் சுசிலாவை, காவல் ஆணையர் சங்கர் ஜிவால், நேரில் அழைத்துப் பாராட்டி வெகுமதி அளித்தார்.
இதையும் படிங்க: கெளரிவாக்கம் நகைக்கடை கொள்ளை வழக்கு... 3 வடமாநில சிறார்கள் கைது...